கரோனா பாதிப்பு: சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் எடுத்துள்ளார். 2013-ல் ஓய்வு பெற்றார்.
கடந்த பிப்ரவரி 27 அன்று, தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அளித்தார் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் அவர் கூறியதாவது:
அனைவருடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. முன்னெச்சரிக்கை கருதி மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த சில நாள்களில் வீட்டுக்குத் திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
உலகக் கோப்பை வெற்றியின் 10-வது ஆண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் என்னுடைய அணி வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.