சென்னை டெஸ்ட்: கோலி, அஸ்வின் அரை சதம்; இந்திய அணி 400 ரன்கள் முன்னிலை!
கோலி, அஸ்வின் அபாரமாக விளையாடி அரை சதமெடுத்துள்ளார்கள்.
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் கோலி, அஸ்வின் அபாரமாக விளையாடி அரை சதமெடுத்துள்ளார்கள். இந்திய அணி 400 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையில் 351 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. 2-ம் நாள் முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 25, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. விராட் கோலியைத் தவிர இதர வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினார்கள். முதல் ஓவரிலேயே புஜாரா 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மாவை 26 ரன்களில் ஃபோக்ஸின் அபாரமான ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார் லீச். 5-ம் நிலை வீரராக ரஹானேவுக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆனால் அவரால் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 8 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 2 பவுண்டரிகளில் அடித்து 10 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரஹானே. 18 பந்துகளுக்குத் தாக்குப்பிடித்த அக்ஷர் படேல், 7 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய அஸ்வின், நன்கு விளையாடி, விரைவாக ரன்கள் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கோலி 38, அஸ்வின் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 351 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
தொடர்ந்து கவனமுடன் விளையாடிய கோலி, 107 பந்துகளில் அரை சதம் எட்டினார். சொந்த மண்ணில் சிறப்பாகப் பந்து வீசி வரும் அஸ்வின், இந்த இன்னிங்ஸில் பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு 64 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
149 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த கோலி, மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி, 67 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 61 ரன்கள், குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 400 ரன்களுக்கும் அதிகமான முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.