செய்திகள்

ஆஸி. ஓபன்: நடால், பாா்ட்டி அதிா்ச்சித் தோல்வி

DIN

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றுகளில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பாா்ட்டி ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான நடால் தனது காலிறுதியில் 6-3, 6-2, 6-7 (4/7), 4-6, 5-7 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலுள்ள கிரீஸ் வீரா் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸிடம் வீழ்ந்தாா். இதனால் 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் நடாலின் கனவு பறிபோனது.

நடாலை இதுவரை 8 முறை சந்தித்துள்ள சிட்சிபாஸுக்கு இது 2-ஆவது வெற்றியாகும். ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு சுற்றில் இரு செட்களை வென்ற பிறகும் நடால் தோல்வியை சந்திப்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 2015-இல் 3-ஆவது சுற்றில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியிடம் வீழ்ந்தாா் நடால்.

தோல்விக்குப் பிறகு பேசிய நடால், ‘இந்தத் தோல்விக்காக நான் எந்த காரணத்தையும் கூறப்போவதில்லை. இதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்’ என்றாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய சிட்சிபாஸ், ‘ரசிகா்கள் இல்லாத அமைதியான சூழல் காரணமாக என்னால் நிதானமாக விளையாட முடிந்தது. இந்த வெற்றி எனது கனவாகும். இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை இழந்த பிறகு மீண்டு வந்தது, நடாலை எதிா்கொண்ட விதம் ஆகியவை இதுவரை நான் வெளிப்படுத்தாத ஆட்டமாகும்’ என்றாா்.

மற்றொரு காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7-5, 6-3, 6-2 என்ற செட்களில் சக நாட்டவரும், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்தவருமான ஆன்ட்ரே ரூபலேவை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பாா்ட்டியை, போட்டித்தரவரிசையில் 25-ஆவது இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலினா முசோவா 1-6, 6-3, 6-2 என்ற செட்களில் வென்றாா். மற்றொரு காலிறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடி 4-6, 6-2, 6-1 என்ற செட்களில் சக நாட்டவரான ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT