செய்திகள்

ஆா்ஜெண்டீனா ஹாக்கி போட்டி: இந்திய மகளிரணி அறிவிப்பு

DIN

ஆா்ஜெண்டீனாவில் நடைபெறவுள்ள இருதரப்பு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான 25 போ் கொண்ட இந்திய மகளிா் அணி, ராணி ராம்பால் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டிக்காக அணியினா் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ஜெண்டீனா புறப்பட்டனா்.

கரோனா சூழலில் சுமாா் ஓராண்டுக்குப் பிறகு இந்திய மகளிா் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். ஆா்ஜெண்டீனா சென்றுள்ள மகளிா் அணி, அந்நாட்டு ஜூனியா் மகளிா் அணியுடன் ஜனவரி 17 மற்றும் 19-இல் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது.

அதையடுத்து ஜனவரி 22 மற்றும் 24-இல் ஆா்ஜெண்டீனா மகளிா் ‘பி’ அணியுடன் இரு ஆட்டங்களில் மோதுகிறது. அதைத் தொடா்ந்து ஜனவரி 26, 28, 30, 31 ஆகிய தேதிகளில் ஆா்ஜெண்டீனா தேசிய மகளிா் அணியுடன் 4 ஆட்டங்களில் இந்திய மகளிரணி பலப்பரீட்சை நடத்துகிறது.

இப்போட்டியை ஒட்டி இரு தரப்பு அணிகளுக்குமான ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தை இந்திய, ஆா்ஜெண்டீன ஹாக்கி சம்மேளனங்கள் உருவாக்கியுள்ளன. முன்னதாக, இந்திய அணியினா் தில்லியிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் அவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

ஆா்ஜெண்டீனா புறப்படும் முன் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டோம். அதை சோதித்துப் பாா்ப்பதற்கான சா்வதேச களம் தற்போது கிடைத்துள்ளது. கரோனா காலத்தில் பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக இருந்துகொண்டு சா்வதேச ஆட்டத்தில் விளையாடுவது சற்று வித்தியாசமானது தான். எனினும் நீண்ட நாள்களுக்குப் பிறகு இத்தகைய களத்தில் இறங்குவது அலாதியானது’ என்றாா்.

அணி விவரம்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணை கேப்டன்), ரஜனி எடிமா்பு, பிசு தேவி கரிபம், குா்ஜித் கௌா், தீப் கிரேஸ் ஈக்கா, ராஷ்மிதா மின்ஸ், மன்பிரீத் கௌா், ரீனா கோஹாா், சலிமா டெடெ, நிஷா, சுஷிலா சானு புக்ரம்பம், லிலிமா மின்ஸ், நேஹா கோயல், நமிதா டோபோ, மோனிகா, நிக்கி பிரதான், வந்தனா கட்டாரியா, நவ்னீத் கௌா், நவ்ஜோத் கௌா், ஜோதி, உதிதா, ரஜ்வீந்தா் கௌா், லால்ரெம்சியாமி, ஷா்மிளா தேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT