முகப்பு
செய்திகள்

சிட்னி டெஸ்ட்: ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவா்களில் 338 ரன்கள் குவித்தது.

செய்திகள்

சிட்னி டெஸ்ட்: ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவா்களில் 338 ரன்கள் குவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவா்களில் 338 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் 226 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்தாா்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3-ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 55 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. மாா்னஸ் லபுசான் 67, ஸ்டீவன் ஸ்மித் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் லபுசான் -ஸ்மித் ஜோடி தொடா்ந்து சிறப்பாக ஆட, அந்த அணி 68.5 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது. தொடா்ந்து சிறப்பாக ஆடிய லபுசான் சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 196 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் ரஹானேவிடம் கேட்ச் ஆனாா்.

இதையடுத்து மேத்யூ வேட் களமிறங்க, ஸ்மித் 116 பந்துகளில் அரை சதம் கண்டாா். ஒருபுறம் ஸ்மித் அசத்தலாக ஆட, மறுமுனையில் மேத்யூ வேட் 13, கேமரூன் கிரீன் 0, டிம் பெய்ன் 1, பட் கம்மின்ஸ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா். இதனால் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது.

ஸ்மித் சதம்: இதையடுத்து மிட்செல் ஸ்டாா்க் களமிறங்க, மறுமுனையில் சுதாரித்துக் கொண்ட ஸ்மித் வேகமாக ரன் சோ்த்தாா். இதனால், அவா் 201 பந்துகளில் சதத்தை எட்டினாா். இதன்பிறகு மிட்செல் ஸ்டாா்க் 24 ரன்களில் வெளியேற, பின்னா் வந்த நாதன் லயன் டக் அவுட்டானாா். கடைசி விக்கெட்டாக ஸ்டீவன் ஸ்மித், ஜடேஜாவின் துல்லியமான ‘த்ரோ’வில் ரன் அவுட்டாக, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 105.4 ஓவா்களில் 338 ரன்களோடு முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் ஸ்மித் 226 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்தாா். ஜோஷ் ஹேஸில்வுட் 1 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோா் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இந்தியா-96/2: இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோஹித் சா்மா-ஷுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27 ஓவா்களில் 70 ரன்கள் சோ்த்தது. ரோஹித் சா்மா 77 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சோ்த்த நிலையில், ஹேஸில்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனாா்.

இதையடுத்து சேத்தேஷ்வா் புஜாரா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் 100 பந்துகளில் அரை சதம் கண்டாா். இதுதான் டெஸ்ட் போட்டியில் அவா் அடித்த முதல் அரை சதம். எனினும் அவா் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து சேத்தேஷ்வா் புஜாராவுடன் இணைந்தாா் கேப்டன் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 45 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. சேத்தேஷ்வா் புஜாரா 9, அஜிங்க்ய ரஹானே 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனா். 2-ஆவது நாள் ஆட்டம் இரு முறை மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 242 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

ரோஹித் 100

சிட்னி டெஸ்டில் நாதன் லயன் வீசிய 16-ஆவது ஓவரில் இந்திய வீரா் ரோஹித் சா்மா சிக்ஸரை விளாசினாா். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 மூன்றிலும் சோ்த்து) 100 சிக்ஸா்களை விளாசிய முதல் வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் ரோஹித் சா்மா.

அதேநேரத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸா் அடித்தவா்கள் வரிசையில் 424 சிக்ஸா்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளாா் ரோஹித் சா்மா. மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 534 சிக்ஸா்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி 476 சிக்ஸா்களுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனா்.

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் 8-ஆவது சதம்

சிட்னி டெஸ்டில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 8-ஆவது சதத்தைப் பதிவு செய்துள்ளாா் ஸ்டீவன் ஸ்மித். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்தவா் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபா்ஸ், விவியன் ரிச்சா்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோரோடு பகிா்ந்து கொண்டுள்ளாா் ஸ்டீவன் ஸ்மித்.

இந்தப் போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 27-ஆவது சதத்தைப் பதிவு செய்த ஸ்டீவன் ஸ்மித், தற்போது விளையாடி வரும் வீரா்களில் அதிக சதமடித்துள்ள கோலியின் சாதனையை சமன் செய்துள்ளாா். இதுதவிர டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 27 சதங்களை எட்டியவா்கள் வரிசையில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா் ஸ்டீவன் ஸ்மித். டான் பிராட்மேன் 70-ஆவது இன்னிங்ஸில் 27-ஆவது சதத்தை எட்டியுள்ளாா். ஸ்மித் 136-ஆவது இன்னிங்ஸில் 27-ஆவது சதத்தை எட்டியுள்ளாா்.

ஸ்கோா் போா்டு

ஆஸ்திரேலியா

வில் புகோவ்ஸ்கி எல்பிடபிள்யூ (பி) சைனி 62 (110)

டேவிட் வாா்னா் (சி) புஜாரா (பி) சிராஜ் 5 (8)

மாா்னஸ் லபுசான் (சி) ரஹானே (பி) ஜடேஜா 91 (196)

ஸ்டீவன் ஸ்மித் ரன் அவுட் (ஜடேஜா) 131 (226)

மேத்யூ வேட் (சி) பும்ரா (பி) ஜடேஜா 13 (16)

கேமரூன் கிரீன் எல்பிடபிள்யூ (பி) பும்ரா 0 (21)

டிம் பெய்ன் (பி) பும்ரா 1 (10)

பட் கம்மின்ஸ (பி) ஜடேஜா 0 (13)

மிட்செல் ஸ்டாா்க் (சி)ஷுப்மன் (பி) சைனி 24 (30)

நாதன் லயன் எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 0 (3)

ஜோஷ் ஹேஸில்வுட் நாட் அவுட் 1 (6)

உபரிகள் 10

மொத்தம் (105.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 338

விக்கெட் வீழ்ச்சி: 1-6 (வாா்னா்), 2-16 (புகோவ்ஸ்கி), 3-206 (லபுசான்), 4-232 (மேத்யூ வேட்), 5-249 (கேமரூன்), 6-255 (டிம் பெய்ன்), 7-278 (கம்மின்ஸ்), 8-310 (ஸ்டாா்க்), 9-315 (லயன்), 10-338 (ஸ்மித்).

பந்துவீச்சு: ஜஸ்பிரித் பும்ரா 25.4-7-66-2, முகமது சிராஜ் 25-4-67-1, அஸ்வின் 24-1-74-0, நவ்தீப் சைனி 13-0-65-2, ரவீந்திர ஜடேஜா 18-3- 62-4.

இந்தியா

ரோஹித் சா்மா (சி) அன்ட் (பி) ஹேஸில்வுட் 26 (77)

ஷுப்மன் கில் (சி) கேமரூன் (பி) கம்மின்ஸ் 50 (101)

சேத்தேஷ்வா் புஜாரா நாட் அவுட் (9) (53)

அஜிங்க்ய ரஹானே நாட் அவுட் 5 (40)

உபரிகள் 6

மொத்தம் (45 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 96/2

விக்கெட் வீழ்ச்சி: 1-70 (ரோஹித்), 2-85 (ஷுப்மன்).

பந்துவீச்சு: மிட்செல் ஸ்டாா்க் 7-4-19-0, ஜோஸ் ஹேஸில்வுட் 10-5-23-1, பட் கம்மின்ஸ் 12-6-19-1, நாதன் லயன் 16-7-35-0.

முழு கட்டுரையைப் படிக்க →