முகப்பு
செய்திகள்

மீண்டும் ஒரு இரட்டை விக்கெட் ஓவர்: தொடரும் ஷர்துலின் மிரட்டல்

​இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3-வது முறையாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷர்துல் தாக்குர் மிரட்டி வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
படம்: ஐசிசி | டிவிட்டர்
பகிர்:


இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3-வது முறையாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷர்துல் தாக்குர் மிரட்டி வருகிறார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

318 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இருவரும் முதல் 5 ஓவர்களுக்கு 24 ரன்கள் எடுத்து நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கினர். பிரசித் கிருஷ்ணா வீசிய 6-வது ஓவரில் பேர்ஸ்டோவ் தலா 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாச இருவரும் அதிரடிக்கு கியரை மாற்றினர்.

இதனால், இங்கிலாந்து அணி 12-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்து ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் என்ற நிலையில் ரன் ரேட்டை நீட்டித்து வந்தது. முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில் ராய் 15-வது ஓவரில் 46 ரன்களுக்கு பிரசித் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுக்கு பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட் குறையத் தொடங்கியது.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ் 94 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஷர்துல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4-வது பந்தில் பட்லரும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஷர்துலுக்கு இது முதன்முறையல்ல.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20:

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது 46 ரன்களுடன் ஸ்டோக்ஸும் 4 ரன்களுடன் மார்கனும் களத்தில் இருந்தனர். இதனால், இங்கிலாந்து பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் 17-வது ஓவரை வீசிய ஷர்துல் முதல் பந்தில் ஸ்டோக்ஸையும், 2-வது பந்தில் மார்கனையும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.

மார்கன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20:

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 89 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் பேர்ஸ்டோவ் 3 ரன்களுடனும், டேவிட் மலான் அரைசதம் அடித்து 67 ரன்களுடனும் இருந்தனர்.

அப்போது 15-வது ஓவரை வீசிய ஷர்துல் 3-வது பந்தில் பேர்ஸ்டோவையும் கடைசி பந்தில் மலானையும் வீழ்த்தி அசத்தினார். இந்த இரட்டை விக்கெட் ஓவரும் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

மலான் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல்

இந்த வரிசையில் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்திலும் மார்கன் மற்றும் பட்லர் எனும் மிகப் பெரிய விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் வீழ்த்திய மூன்று இரட்டை விக்கெட்டுகளும் மிக முக்கியமான விக்கெட்டுகள், முக்கியமான கட்டத்தில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகள்.

இரட்டை விக்கெட் ஓவரை ஹாட்ரிக் ஆட்டங்களில் வீசி அணிக்கு பலனளிக்கக்கூடிய மிக முக்கியமான சாதனையை ஷர்துல் படைத்து வருகிறார்.

சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →