கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வேறு இடத்தில் நடைபெறும் என்று வெளியான செய்திகளை டென்னிஸ் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வழக்கமாக மெல்போர்னில் நடைபெறும். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாகவும் 2022 ஜூன் வரை சர்வதேச எல்லைகள் மூடப்பட வாய்ப்புள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை துபாய் அல்லது தோஹாவில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாள்களுக்குத் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையை டென்னிஸ் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாகவும் வெளியான செய்திகளை டென்னிஸ் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.
2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தினோம். 2022 போட்டியை ஜனவரியில் நடத்தவுள்ளோம். சிறந்த வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை மீண்டும் மெல்போர்னில் நடத்தவே விரும்புகிறோம். வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என டென்னிஸ் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.