இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய ஷர்துல்: 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி மட்டும் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களைக்கூட தொடவில்லை.
இதையும் படிக்க | மீண்டும் அரைசதத்தில் ஆட்டமிழந்த கோலி: திணறும் இந்தியா!
இந்த நிலையில், 8-வது வீரராகக் களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாகப் பறக்கவிட்டார். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும், ஷர்துல் மட்டையை சுழற்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் செய்வதறியாது திகைத்தார்.
ஆலி ராபின்சன் வீசிய ஓவரில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ஷர்துல் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். உமேஷ் யாதவ் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.
அரைசதம் அடித்த ஷர்துல் 57 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தை சிக்ஸருக்குப் பறக்க முயற்சித்து எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
ஷர்துல், உமேஷ் இணை 8-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு, ஜாஸ்பிரீத் பூம்ராவும், உமேஷ் யாதவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரெய்க் ஓவர்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.