செய்திகள்

டி20 உலகக் கோப்பை அணியில் தமிம் இக்பால் இடம்பெற்றிருந்தார்: கிரிக்கெட் வாரியத் தலைவர் தகவல்

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகிய நிலையில் அவர் பெயர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகுவதாக பிரபல வங்கதேச வீரர் தமிம் இக்பால் தெரிவித்தார். 

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிம் இக்பாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தமிம் இக்பால் விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. 2019 முதல் வங்கதேச அணி விளையாடிய 23 டி20 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். இந்த வருடம் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. 

டி20 உலகக் கோப்பையில் விளையாடாதது பற்றி தமிம் இக்பால் கூறியதாவது: கடந்த 15, 20 டி20 ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. எனக்குப் பதிலாக யார் விளையாடியிருந்தாலும் அவர்களுடைய இடத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர் ஆகியோரிடம் இதுபற்றி பேசினேன். டி20 உலகக் கோப்பையில் நான் விளையாடக்கூடாது. எனவே என்னைத் தேர்வு செய்யவேண்டாம் எனக் கூறியுள்ளேன். நீண்ட நாளாக விளையாடாதது, காயம் ஏற்பட்டது போன்றவை இம்முடிவுக்கான காரணங்கள். எனினும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு காயத்திலிருந்து நான் குணமாகிவிடுவேன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடாமல் போனாலும் டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

தமிம் இக்பால் எங்களுடைய முதல் தேர்வாக இருந்தார். உலகக் கோப்பை அணியில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது. விலகுவதாக அவர் சொன்ன பிறகு அணியில் அவர் பெயர் இல்லை. தமிம் இக்பால் இன்னும் பல உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவார். இது துணிச்சலான முடிவு. அவ்வளவு சுலபம் அல்ல. எல்லோருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆசையாக இருக்கும். இப்போது விளையாடுபவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, தான் விளையாடினால் அது நியாயமாக இருக்காது என எங்களிடம் கூறினார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

SCROLL FOR NEXT