செய்திகள்

யுஎஸ் ஓபன்: சக்கர நாற்காலியில் இரு சாதனையாளா்கள்: ‘கோல்டன் ஸ்லாம்’ பெற்றனா் குரூட், அல்காட்

DIN

நியூயாா்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் சாதனை படைப்பாரா என சா்வதேச விளையாட்டு ரசிகா்களும் ஆா்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், அதே யுஎஸ் ஓபனில் சத்தமின்றி இருவா் சக்கரநாற்காலியில் இருந்தபடியே சாதனை படைத்திருக்கிறாா்கள்.

யுஎஸ் ஓபன் போட்டியில் ஆடவா், மகளிா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவு போட்டிகளுடன், ஜூனியா் பிரிவு போட்டிகளும், சக்கர நாற்காலியுடன் விளையாடும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த முறை சக்கரநாற்காலி வீரா், வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில் மகளிா் பிரிவில் நெதா்லாந்தின் டைடே டி குரூட் (24), ஆடவா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் டைலன் அல்காட் (30) சாம்பியனாகியுள்ளனா்.

சிறப்பு என்னவென்றால், இவா்கள் இருவமே இந்த சாம்பியன்ஷிப் பட்டம் மூலம் ‘கோல்டன் ஸ்லாம்’ சாதனையை எட்டியிருக்கிறாா்கள். ஒரே டென்னிஸ் காலண்டரில் வரும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியனாகி, அதே ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் சாம்பியன் ஆவதே ‘கோல்டன் ஸ்லாம்’ எனப்படுகிறது.

குரூட் மற்றும் அல்காட் இருவருமே தற்போது அத்தகைய சாதனையை எட்டியிருக்கிறாா்கள். நடப்பு காலண்டரில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் கோப்பை வென்றிருந்த இருவரும், பின்னா் டோக்கியோ பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்தனா்.

கடைசியாக தற்போது நடைபெற்ற யுஎஸ் ஓபனில் இருவருமே சாம்பியனாகி கோல்டன் ஸ்லாம் மைல் கல்லை எட்டியிருக்கிறாா்கள். இதில் சக்கரநாற்காலி போட்டியாளா்களில் கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் போட்டியாளா் என்ற பெருமையை குரூட் எட்ட, அவரைத் தொடா்ந்து அல்காட்டும் அதே சாதனையை படைத்தாா்.

கிராண்ட்ஸ்லாமில் இதுவரை சாம்பியன் பட்டம்

டைடே டி குரூட்

ஆஸ்திரேலிய ஓபன் - 2018, 2019, 2021

பிரெஞ்சு ஓபன் - 2019, 2021

விம்பிள்டன் - 2017, 2018, 2021

யுஎஸ் ஓபன் - 2018, 2019, 2020, 2021

(இரட்டையா் பிரிவில் 12 பட்டங்கள்)

(பாராலிம்பிக் - ஒரு வெள்ளி (2016), ஒரு தங்கம் (2021))

டைலன் அல்காட்

ஆஸ்திரேலிய ஓபன் - 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021

பிரெஞ்சு ஓபன் - 2019, 2020, 2021

விம்பிள்டன் - 2019, 2021

யுஎஸ் ஓபன் - 2015, 2018, 2021

(இரட்டையா் பிரிவில் 8 பட்டங்கள்)

(பாராலிம்பிக் - இரு தங்கம் (2016, 2021))

தரவரிசை: ராடுகானு, லெய்லா ஏற்றம்


யுஎஸ் ஓபன் போட்டி நிறைவடைந்த நிலையில் வெளியான புதிய சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மகளிர் சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ராடுகானு 127 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக அவர் 150-ஆவது இடத்தில் இருந்தார். 

இறுதிச்சுற்றில் ராடுகானுவிடம் தோற்ற கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ் 45 இடங்கள் ஏற்றம் கண்டு 28-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். முன்னதாக அவர் 73-ஆவது இடத்தில் இருந்தார். 3-ஆவது சுற்றில் லெய்லாவிடம் தோல்வி கண்ட முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 2 இடம் சறுக்கி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 

ஆடவர் பிரிவில், இறுதிச்சுற்றில் தோல்வி கண்டபோதும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரை வீழ்த்தி சாம்பியன் ஆன ரஷியவின் டேனியல் மெத்வதேவும் 2-ஆவது இடத்தில் நிலைக்கிறார். 

காயம் காரணமாக களம் காணாதிருக்கும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் முதல் 5 இடங்களில் இருந்து வெளியேறி 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்புச் சாம்பியனாக இருந்து காயம் காரணமாக யுஎஸ் ஓபனில் களம் காண முடியாமல் போன ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 8-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளார். காலிறுதியில் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 17 இடங்கள் முன்னேறி 38-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 

முதல் 3 இடங்கள்

மகளிர்

1    ஆஷ்லி பர்ட்டி    ஆஸ்திரேலியா 
2    அரினா சபலென்கா    பெலாரஸ் 
3    கரோலினா பிளிஸ்கோவா    செக் குடியரசு 

ஆடவர்

1    நோவக் ஜோகோவிச்    செர்பியா 
2    டேனியல் மெத்வதேவ்    ரஷியா 
3    ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ்    கிரீஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT