சர்ஃபராஸ் கான் (கோப்புப் படம்) 
செய்திகள்

இந்திய டெஸ்ட் அணியின் கதவைப் பலமாகத் தட்டும் சர்ஃபராஸ் கான்

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்குப் பலத்த போட்டி ஏற்பட்டிருக்கும் சூழலில் மும்பையின் சர்ஃபராஸ் கான்...

DIN

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்குப் பலத்த போட்டி ஏற்பட்டிருக்கும் சூழலில் மும்பையின் சர்ஃபராஸ் கான் ரஞ்சி கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடி மேலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

எலைட் குரூப் டி பிரிவில் ஒடிஷாவை வீழ்த்தி 2017-18-க்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்கு முதல்முதலாகத் தகுதி பெற்றுள்ளது மும்பை அணி. இந்த ஆட்டத்தில் 181 பந்துகளில் 165 ரன்கள் எடுத்துள்ளார் 24 வயது சர்ஃபராஸ் கான்.

ஆரம்பத்தில் மும்பை அணிக்கு விளையாடிய சர்ஃபராஸ் கான், தந்தையின் அறிவுரைப்படி உத்தரப் பிரதேச அணிக்கு மாறினார். பள்ளிக் காலங்களில் மும்பை அணிக்காக விளையாடி 2014-ல் யு-19 உலகக் கோப்பைப் போட்டி வரைக்கும் சென்ற சர்ஃபராஸ் கான், நல்ல வாய்ப்புகளுக்காக அணி மாறினார். ஆனால் அது சரியாக முடிவாக அமையவில்லை. எங்குச் சென்றாலும் வெள்ளைப் பந்துக்குரிய வீரராகப் பார்க்கப்பட்டார் சர்ஃபராஸ் கான். உத்தரப் பிரதேச அணியில் ஒரு பருவம் முழுக்க விளையாட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் மும்பை அணிக்கே திரும்பினார். அங்கு ஒரு வருடக் காலத்துக்குப் பிறகு தான் அணியில் மீண்டும் இடம்பெற முடியும் என்பதால் இரு வருடங்கள் வீணாகிப் போகின. இந்த நேரத்தில் முதல்தர கிரிக்கெட்டுக்கான தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். தன்னை வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரர் என முத்திரை குத்துவதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றிக் காட்ட எண்ணினார்.

2016-ல் சரியான உடற்தகுதி இல்லை என்பதற்காக ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதைப் பற்றி சர்ஃபராஸிடம் முகத்துக்கு நேராகவே பேசினார் கோலி. பிறகு உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து உடற்தகுதியை வளர்த்துக்கொண்டார். இதனால் மும்பை அணிக்குத் திரும்பியபோது பலவிதங்களிலும் புது மனிதராகக இருந்தார். 

முதல்தர கிரிக்கெட்டில் முதல் 16 இன்னிங்ஸில் 533 ரன்கள் தான் எடுத்தார் சர்ஃபராஸ் கான். சராசரி - 35.5, ஒரு சதம் மட்டுமே. ஆனால் 2020-ல் மும்பைக்குத் திரும்பிய பிறகு காட்சிகள் மாறின. அதன்பிறகு விளையாடிய 16 இன்னிங்ஸில் 1566 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 130.50. 2 சதங்கள், 2 இரட்டைச் சதங்கள், 1 முச்சதம். இன்னொன்று விரைவாக ரன்கள் குவிப்பதால் அணிக்கும் அவருடைய பேட்டிங் பெரிய பலமாக இருக்கிறது. முதல்தர கிரிக்கெட்டில் சர்ஃபராஸின் ஸ்டிரைக் ரேட் - 71.76.

இந்த வருட ரஞ்சி போட்டியில் சர்ஃபராஸ் எடுத்த ரன்கள்:

275, 63 & 48, 165.

ஏற்கெனவே இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் விளையாடி ஒரு அரை சதமெடுத்தார். 

இந்திய அணியின் நடுவரிசையில் புஜாரா, ரஹானே இல்லாத நிலையில் அந்த இடங்களைப் பிடிக்க கடும்போட்டி நடைபெற்று வருகிறது. இதற்குமேலும் தாமதிக்கக் கூடாது, சர்ஃபராஸை இந்திய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது. 

இந்திய அணியில் வெகுசீக்கிரத்தில் சர்ஃபராஸின் ஆட்டத்தைப் பார்க்கத் தயாராக இருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT