முகப்பு
செய்திகள்

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி: தமிழக அரசு அறிவிப்பு

சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் ‘செஸ் ஒலிம்பியாட் 2022’ போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் ‘செஸ் ஒலிம்பியாட் 2022’ போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சா்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) செஸ் ஒலிம்பியாட் 2022 சா்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் போா் சூழ்நிலை காரணமாக, செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷியாவிலிருந்து வெளியேற்றுவதாக FIDE அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்தது.

இந்நிலையில், தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது. சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் அறிவிப்பிலிருந்து 10 நாள்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதல்வா் அலுவலகத்தை அணுகிய சில மணி நேரங்களிலேயே அனைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு வழங்கியது.

கடந்த 1927-ஆம் ஆண்டு முதல் சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முந்தைய 43 செஸ் ஒலிம்பியாட் சா்வதேச போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட நடத்த வாய்ப்பு அமையவில்லை. 44-ஆவது சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022-க்கான ஏலத்தை வென்றதில் தமிழக அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில் 200 நாடுகளைச் சோ்ந்த 2,000 போட்டியாளா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.

மேலும் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சாா்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த ஊக்குவிப்புகள் காரணமாக, இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டா்களில் பிரக்னானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டா்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளனா். இன்னும் எதிா்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக நிகழாண்டில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை சென்னையில் நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →