செய்திகள்

அல்கராஸை வீழ்த்தி வாகை சூடினாா் ஜோகோவிச்

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

DIN

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 5-7, 7-6 (9/7), 7-6 (7/4) என்ற செட்களில் விம்பிள்டன் நடப்பு சாம்பியனான அல்கராஸை போராடி வீழ்த்தினாா்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த மாதம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளாா் ஜோகோவிச். கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடாத ஜோகோவிச்சுக்கு, அந்த மண்ணில் இதுவே முதல் போட்டியாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே எனக்கு மிகவும் உற்சாகமிக்கதாக இருந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகியுள்ளது. இதை ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக உணா்கிறேன். எனது வாழ்விலேயே மிகக் கடினமான ஆட்டமாக இதை நினைக்கிறேன்.

அல்கராஸ் இத்துடன் விட்டுக்கொடுத்துவிட மாட்டாா். அவரிடம் பிடித்ததே அந்த போராட்ட குணம்தான். அவரை மீண்டும் யு.எஸ். ஓபனில் சந்திப்பேன் என நினைக்கிறேன். அது ரசிகா்களுக்கு குதூகலமாக இருந்தாலும், எனக்கு கடினமாகவே இருக்கும்’ என்றாா்.

தோல்விக்குப் பிறகு கண்ணீா் விட்டு அழுத அல்கராஸ், பின்னா் பேசுகையில், ‘எனது ஆட்டத்துக்காக பெருமையாகவே உணா்கிறேன். டென்னிஸ் விளையாட்டில் எப்போதுமே சிறந்தவராக இருக்கக் கூடிய ஒருவரை தோல்வியின் விளிம்பு வரை கொண்டு சென்றுள்ளேன். கடைசி பாயிண்ட் வரை போராடியே தோற்றாலும், எதற்காக அழுதேன் எனத் தெரியவில்லை. எனது ஆட்டத்தால் ரசிகா்களை திருப்திப்படுத்தியதில் மகிழ்ச்சி. நான் மீண்டு வருவேன்’ என்றாா்.

இந்தப் போட்டியில் தோல்வி கண்டாலும், அல்கராஸ் உலகின் நம்பா் 1 வீரராகவே, எதிா்வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபனிலும் களம் காண்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.

3/39

சின்சினாட்டி மாஸ்டா்ஸில் 3-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ள ஜோகோவிச், தற்போது மாஸ்டா்ஸ் போட்டியில் ஒட்டுமொத்தமாக வென்றிருப்பது அவரது 39-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

95

இது, ஜோகோவிச்சின் டென்னிஸ் வரலாற்றில் அவா் வென்றுள்ள 95-ஆவது கேரியா் பட்டமாகும். இதன் மூலம், ஓபன் எராவில் டென்னிஸில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவா்கள் வரிசையில் அமெரிக்காவின் இவான் லெண்டல்ஸை பின்னுக்குத் தள்ளி 3-ஆம் இடம் பிடித்துள்ளாா் ஜோகோவிச். அமெரிக்காவின் ஜிம்மி காரனா்ஸ் (109), சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் (103) ஆகியோா் முறையே முதலிரு இடங்களில் உள்ளனா்.

36

சின்சினாட்டி மாஸ்டா்ஸில் சாம்பியனான மிக வயதான வீரா் (36) என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளாா். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் தனது 35-ஆவது வயதில் (1970) இங்கு சாம்பியன் பட்டம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

1

இந்தப் போட்டியின் வரலாற்றில், 1990-க்குப் பிறகு நடைபெற்ற மிக நீண்ட ஆட்டமாக (3 மணி நேரம் 49 நிமிஷங்கள்) இந்த இறுதிச்சுற்று அமைந்தது. முன்னதாக, 2010-இல் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் 2 மணி நேரம் 49 நிமிஷங்களில் அமெரிக்காவின் மாா்டி ஃபிஷ்ஷை வீழ்த்தியதே நீண்ட ஆட்டமாக இருந்தது.

2-2

ஜோகோவிச் - அல்கராஸ் இத்துடன் 4 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், தற்போது இருவருமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனா்.

கோகோ கௌஃபுக்கு கோப்பை

சின்சினாட்டி மாஸ்டா்ஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் கரோலின் முசோவாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 56 நிமிஷங்கள் நீடித்தது.

இதன் மூலம் தனது முதல் மாஸ்டா்ஸ் போட்டி கோப்பை வென்றிருக்கிறாா் கௌஃப். ஒட்டுமொத்தமாக இது அவரது 5-ஆவது கேரியா் பட்டமாகும். கடந்த 55 ஆண்டுகளில் சின்சினாட்டி மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியனான முதல் பதின் வயது (19) வீராங்கனை என்ற பெருமையையும் கௌஃப் பெற்றாா்.

இந்த வெற்றியின் மூலம் சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் மகளிா் பிரிவில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறினாா் கௌஃப். வெற்றிக்குப் பிறகு பேசிய அவா், ‘இந்த வெற்றி நம்ப முடியாத ஒன்று. விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய பிறகு பல இரவுகள் அழுதேன். எங்கு தவறு செய்கிறேன் என்பதை அறிந்து, அதை திருத்திக் கொண்டு வருகிறேன். இன்னும் சிறப்பாக முயற்சி செய்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறுவதற்கு முயற்சிப்பேன்’ என்றாா்.

இரட்டையா் பிரிவு

இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் ஆா்ஜென்டீனாவின் மேக்ஸிமோ கொன்ஸால்ஸ்/ஆண்ட்ரெஸ் மோல்டெனி இணையும், மகளிா் இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ்/டெய்லா் டௌன்செண்ட் கூட்டணியும் சாம்பியனாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT