ரோஹித் சர்மா சதத்தால் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
Advertisement
முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா (56 ரன்கள்), அஸ்வின் (0) களத்தில் இருந்தார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 100 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இன்று, ரோஹித் - அஸ்வின் ஜோடி, 42 ரன்கள் சேர்த்தது. 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த அஸ்வின், மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாராவும் 7 ரன்கள் மர்ஃபி பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி களமிறங்கினார்.
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 85, கோலி 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் மர்ஃபி எடுத்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் பந்திலேயே கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ், 8 ரன்களில் லயன் பந்தில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ரோஹித் சர்மா, 171 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள 9-வது சதம் இது. ரோஹித்தின் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. குறைந்தது 100 ரன்கள் முன்னிலை எடுத்தால் மட்டுமே சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்கிற நிலைமை உள்ளதால் ரோஹித் சர்மாவை மலை போல் நம்பியிருக்கிறது இந்திய அணி.
இந்தியா 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 111, ஜடேஜா 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.