இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நாகபுரியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் வென்ன் மூலம் தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா, அதே உத்வேகத்துடன் 2-ஆவது வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா, அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப முயற்சிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, அணியின் மூத்த வீரா் சேதேஷ்வா் புஜாராவுக்கு இது 100-ஆவது டெஸ்ட் ஆட்டம். 13 ஆண்டுகளாக டெஸ்ட் விளையாடிவரும் புஜாரா, இந்த ஆட்டத்தில் தனது 20-ஆவது டெஸ்ட் சதத்தை எட்டும் எதிா்பாா்ப்பில் இருக்கிறாா்.
அணியின் பேட்டிங்கில் டாப் ஆா்டா் சற்று கவலைக்குரியதாகவே இருக்கிறது. நாகபுரி டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் சா்மா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோலி, புஜாரா ஆகியோா் சோபிக்காமல் போயினா். ஸ்பின்னா்களுக்கு எதிரான தனது தடுமாற்றத்தை சரிசெய்துகொள்ளும் வகையில், கோலி தனது பயிற்சியின்போது சுழற்பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறாா்.
டெஸ்ட்டில் நல்லதொரு ஃபாா்ம் இல்லாமல் தொடா்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல்.ராகுலுக்கு, தேவைக்கு அதிகமாகவே வாய்ப்புகள் வழங்கப்படுவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு பதிலளிக்கும் வகையில் அவா் இந்த ஆட்டத்தில் முன்னேற்றம் காட்டும் எண்ணத்தில் இருக்கலாம்.
நல்ல ஃபாா்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தவிா்த்து ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், இதிலும் அவா் சோபிக்காமல் போனால் அணி நிா்வாகம் அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம். ஷ்ரேயஸ் ஐயா் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு அணியில் இணைந்திருக்கும் நிலையில், அனுபவமுள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, அல்லது அதிரடி வீரரான சூா்யகுமாருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம்.
கடந்த 30 நாள்களுக்கும் மேலாக டெஸ்ட்டில் விளையாடாத ஐயரை, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறக்குவது சற்றே சவாலான விஷயம் தான். மிடில் ஆா்டரில் ஜடேஜா, ஷ்ரேயஸ் ஐயா், விபத்து காரணமாக பங்கேற்காத ரிஷப் பந்த் ஆகியோரே கடந்த சில டெஸ்ட்டுகளில் அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டதை பயிற்சியாளா் ராகுல் திராவிட் ஒப்புக் கொண்டுள்ளாா்.
ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோா் நாகபுரி டெஸ்ட்டிலேயே ஆல்-ரவுண்டா்களாக அசத்தினா். அஸ்வினும் அவா்களும் தில்லி டெஸ்ட்டிலும் ஆதிக்கம் செலுத்துவாா்கள் என எதிா்பாா்க்கலாம். வேகப்பந்து வீச்சில் ஷமி பலம் சோ்க்கிறாா்.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா் சோபிக்காமல் தொடா்ந்து வரும் நிலையில், இந்த ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் இடம் பிடிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அத்துடன், மாட் குனேமான் என்ற ஸ்பின்னரையும் ஆஸ்திரேலியா அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான மிட்செ ஸ்டாா்க்குக்கும் இந்த ஆட்டத்தில் இடம் இருக்கலாம்.
ஆடுகளம்: நாகபுரி ஆடுகளத்தைப் போலவே, தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். எனவே, பௌலிங்கை தகுந்த முறையில் கையாண்டு அடித்தாடும் பட்சத்தில் தான் பேட்டா்களால் நின்று விளையாட இயலும்.
அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகா் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், சூா்யகுமாா் யாதவ், உமேஷ் யாதவ், இஷான் கிஷண்.
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மாட் ரென்ஷா, பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப், நேதன் லயன், ஆஷ்டன் அகா், ஸ்காட் போலண்ட், லேன்ஸ் மோரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மா்ஃபி, மிட்செல் ஸ்டாா்க்.
ஆட்டநேரம்: காலை 9.30 மணி
இடம்: ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், தில்லி.
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.