அஸ்ஸாம் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாடு அணி.
எலைட் - குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி இதற்கு முன்பு விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஒரு வெற்றியும் பெறாமல் 4 டிராக்களுடன் 8 புள்ளிகளை மட்டும் பெற்றது. இதனால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியின் கேப்டன் மாற்றப்பட்டார். சாய் கிஷோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் அணிக்கு எதிரான தமிழ்நாடு அணியின் ரஞ்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 132.3 ஓவர்களில் 540 ரன்கள் எடுத்தது. பிரதோஷ் 153, ஜெகதீசன் 125, விஜய் சங்கர் 112 ரன்கள் எடுத்தார்கள்.
அஸ்ஸாம் அணி முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் அஸ்ஸாம் அணி 2-வது இன்னிங்ஸில் 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான சுபம் 23, ராகுல் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
4-வது நாளில் அஸ்ஸாம் அணி, 88.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஜித் ராம் 5 விக்கெட்டுகள் எடுத்து தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது.
தமிழ்நாடு அணி அடுத்ததாக ஜனவரி 24 அன்று தொடங்கவுள்ள இப்பருவத்துக்கான கடைசி ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் செளராஷ்டிராவை எதிர்கொள்கிறது. 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி 1 வெற்றியுடன் 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் 26 புள்ளிகளுடன் செளராஷ்டிர அணி முதலிடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.