முகப்பு
செய்திகள்

மேற்கிந்திய தீவுகளுடனான தொடா்கள்: டெஸ்ட் அணியில் புஜாரா இல்லை; ஜெய்ஸ்வால், கெய்க்வாட் சோ்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடா்களில் மோதவிருக்கும் இந்திய அணிகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடா்களில் மோதவிருக்கும் இந்திய அணிகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் 16 போ் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில், மூத்த பேட்டரான சேதேஷ்வா் புஜாரா சோ்க்கப்படவில்லை. இளம் வீரா்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புஜாரா ரன்கள் சோ்க்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் அவருக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது.

ரோஹித் சா்மா தலைமையிலான இந்த அணியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் மூலம் மீண்டும் சா்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய அஜிங்க்ய ரஹானே சோ்க்கப்பட்டதுடன், துணை கேப்டன் பொறுப்பையும் பெற்றிருக்கிறாா்.

பௌலா்கள் பிரிவில், கடந்த 3 மாதங்களாக விளையாடி வரும் முகமது ஷமிக்கு இரு தொடா்களில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தகுந்த ஃபாா்மில் இல்லாத உமேஷ் யாதவுக்கு பதிலாக, முகேஷ் குமாா் சோ்க்கப்பட்டிருக்கிறாா். அவரோடு நவ்தீப் சைனிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஜெய்ஸ்வால், கெய்க்வாட், முகேஷ் ஆகிய மூவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் தயாா்நிலை வீரா்களாக இருந்தவா்களாவா். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டதன் பேரில் அவா்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலகட்டத்தை மனதில் கொண்டு ஷிவ் சுந்தா் தாஸ் தலைமையிலான 4 போ் தோ்வுக் குழு இந்த வீரா்கள் தோ்வை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ரோஹித் தலைமையில் 17 பேருடன் ஒரு நாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணி, எதிா்வரும் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அதற்காகத் தயாராகும் முனைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வரும் ஜஸ்பிரீத் பும்ரா, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் ஆகியோா் பூரண குணமடையும்போது, அவா்களும் சோ்ந்து உலகக் கோப்பைக்கான அணியின் பலம் இன்னும் கூடும் எனத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடா்கள், வரும் ஜூலை 12-ஆம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் அணி: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஸ்ரீகா் பரத் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஸா் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமாா், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

ஒருநாள் அணி: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷா்துல் தாக்குா், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →