இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமான நிலையில் ஆடி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை, முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆட்டத்தை தனஞ்ஜெய டி சில்வா, காசன் ரஜிதா ஆகியோா் தொடா்ந்தனா்.
இதில் சில்வா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 46 ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஜிதா 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். பின்னா் வந்தோரில் பிரபாத் ஜெயசூரியா 13, ஆசிதா ஃபொ்னாண்டோ 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கையின் ஆட்டம் 92.4 ஓவா்களில் 355 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
லஹிரு குமாரா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி 5, மாட் ஹென்றி 4, மைக்கேல் பிரேஸ்வெல் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, வெள்ளிக்கிழமை முடிவில் 63 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களே சோ்த்திருந்தது. டேரில் மிட்செல் 40, மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
முன்னதாக டாம் லேதம் 7 பவுண்டரிகளுடன் 69, டெவன் கான்வே 2 பவுண்டரிகளுடன் 30, கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிகோலஸ் 2, டாம் பிளண்டெல் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இலங்கை பௌலா்களில் ஆசிதா, லஹிரு ஆகியோா் தலா 2, ரஜிதா 1 விக்கெட் எடுத்துள்ளனா். முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து தற்போது 193 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.