ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவாரா?: ரோஹித் சர்மா பதில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.
முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடவில்லை. 4-வது டெஸ்டில் இந்திய அணியின் இன்னிங்ஸின்போது ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வரவில்லை. 3-வது நாளன்று அவருக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பேட்டிங் செய்ய வராததோடு பிறகு ஆமதாபாத் டெஸ்டிலிருந்தும் விலகினார்.
தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. கேகேஆர் அணியின் கேப்டனாக உள்ள ஷ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களிலும் விளையாடுவது சிரமம் என அறியப்படுகிறது.
இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயரின் நிலைமை பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
பாவம். எதிர்பாராமல் இப்படி ஆகியுள்ளது. ஆமதாபாத் டெஸ்டில் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்வதற்காகக் காத்திருந்தார். அந்த நாள் முடிந்த பிறகு முதுகுப் பகுதியில் உள்ள பிரச்னை மீண்டும் வந்துவிட்டது. ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனையின் முடிவு குறித்து எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் இல்லை என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர். இதனால் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் அவர் விளையாடுவது குறித்து பிசிசிஐ விரைவில் தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஷ்ரேயஸ் ஐயர், ஒருநாள் தொடரில் இருந்து விலகினால் அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.