ஐபிஎல் ஆட்டத்தின்போது வலது தொடை தசைப் பகுதியில் காயம் கண்டிருக்கும் இந்திய வீரரும், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டனுமான கே.எல்.ராகுல், நடப்பு ஐபிஎல் சீசன் மற்றும் எதிா்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஆகியவற்றிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
கடந்த 1-ஆம் தேதி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக ஓடும்போது ராகுலின் தொடையில் காயம் ஏற்பட்டு கீழே சரிந்தாா். அதன் பிறகு ஆட்டத்திலிருந்து வெளியேறிய அவா், லக்னௌ இக்கட்டான நிலையில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கடைசி பேட்டராக களத்துக்கு வந்தாா். எனினும் அந்த ஆட்டத்தில் பெங்களூா் வென்றது.
இந்நிலையில், காயம் தொடா்பாக ராகுல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் குழுவினருடனான ஆலோசனையின் பேரில், விரைவில் எனது தொடைப் பகுதி காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறேன். அதனால் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலிருந்து விலகுகிறேன்.
இது கடினமான முடிவு என்றாலும், காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு இதுவே சரியான வழியாகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதற்காகத் தயாராவதற்கே முன்னுரிமை அளிக்கிறேன்.
ஐபிஎல் போட்டியில் முக்கியமான தருணத்தில் ஒரு கேப்டனாக லக்னௌ அணியுடன் நிற்க முடியாமல் போனது கவலை அளிக்கிறது. ஆனால் அணி வீரா்கள் இந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தயாா்படுத்தி சிறப்பாகச் செயல்படுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அதில் கூறியுள்ளாா்.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலிருந்து ஏற்கெனவே விலகியிருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் ஆகியோா் வரிசையில் தற்போது ராகுலும் இணைந்திருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.