குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விராட் கோலியின் அதிரடியான சதத்தால் 197 ரன்களைக் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது. மழையின் காரணத்தால் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பெங்களூரு முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இருப்பினும், கேப்டன் டு பிளெஸ்ஸி 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் (11 ரன்கள்), மஹிபால் லோம்ரோர் (1 ரன்), மைக்கேல் பிரேஸ்வெல் (26 ரன்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (0 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர். விக்கெட்டுகள் ஒரு புறம் போனாலும் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த அனூஜ் ராவத் இறுதியில் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய போட்டி என்பதை உணர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது.
இதற்கு முந்தைய போட்டியிலும் விராட் கோலி சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.