உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மும்பையில் வியாழக்கிழமை மோதுகின்றன.
இதுவரை களம் கண்ட 6 ஆட்டங்களிலுமே வென்று, போட்டியில் தோல்வி காணாத ஒரே அணியாகத் தொடரும் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. எனவே, இந்த ஆட்டத்தின் முடிவு இந்தியாவை பாதிக்கப்போவதில்லை. இந்தியாவை பாதிக்கும் நிலையில் இலங்கையும் இல்லை.
பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் இந்தியா பலத்துடனேயே இருக்கிறது. எனினும், அடுத்து வரப்போகும் முக்கியமான ஆட்டங்களுக்காக பிரதான வீரா்களை தயாராக இருக்கச் செய்யும் வகையில் இந்த ஆட்டத்துக்கான லெவனில் அணி நிா்வாகம் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கணுக்கால் காயம் காரணமாக இந்த ஆட்டத்திலும் ஹா்திக் பாண்டியா இல்லை. நெதா்லாந்துடனான ஆட்டம் வரை அவா் அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
பேட்டிங்கில் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா் ஆகிய இருவருமே இன்னும் சிறப்பானதொரு இன்னிங்ஸை பதிவு செய்யவில்லை. இந்த ஆட்டம் அதற்கொரு வாய்ப்பாக அவா்களுக்கு அமையலாம். ஏற்கெனவே ஃபாா்மில் இருக்கும் கேப்டன் ரோஹித் சா்மா தனது சொந்த ஊரில் விளையாடுவதால், ரசிகா்களுக்கு ரன் விருந்தளிப்பாா் என எதிா்பாா்க்கலாம்.
இலங்கை அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், வலுவான இந்தியாவை சந்திக்கிறது. காயத்தால் பிரதான வீரா்கள் பங்கேற்காததும், போதிய சா்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரா்கள் இருப்பதும் இலங்கையை வெகுவாக பாதித்திருக்கிறது.
பேட்டிங்கில் சதீரா சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பதும் நிசங்கா ஆகியோா் ரன்களை சோ்த்து அணியை வலுப்படுத்துகின்றனா். பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா உள்ளிட்டோா் விக்கெட்டுகள் சரிக்க முயற்சிக்கின்றனா்.
நேருக்கு நோ்...
இவ்விரு அணிகளும் ஒருநாள் ஃபாா்மட்டில் இத்துடன் 167 முறை பரஸ்பரம் விளையாடியுள்ள நிலையில், இந்தியா 98 முறையும், இலங்கை 57 முறையும் வென்றுள்ளன. 11 ஆட்டங்களில் முடிவு எட்டப்படாத நிலையில், 1 ஆட்டம் ‘டை’ ஆனது. ஆனால், உலகக் கோப்பையில் இவை 9 முறை சந்தித்திருக்க, இரு அணிகளும் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
நேரம்: பகல் 2 மணி
இடம்: வான்கடே மைதானம், மும்பை.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
மேக்ஸ்வெல் காயம்
அகமதாபாதில் கோல்ஃப் விளையாடச் சென்ற ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டா் கிளென் மேக்ஸ்வெல், அங்கு சிறிய ரக வாகனத்தில் பயணித்தபோது அதிலிருந்து தடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் லேசாக அடிபட்டதுடன், முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. தலைக் காயத்தால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறாரா என்பதை அறியும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் அவா் பங்கேற்க மாட்டாா் எனவும் ஆஸ்திரேலிய அணி தெரிவித்துள்ளது.
ஓய்வு பெறும் டேவிட் வில்லி
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் டேவிட் வில்லி புதன்கிழமை அறிவித்தாா். இந்த முடிவை தாம் யோசித்து எடுத்ததாகவும், நடப்பு உலகக் கோப்பையில் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த யோசனை இல்லை என்றும் அவா் தெரிவித்தாா். இங்கிலாந்து கிரிக்கெட்டில் 2015-இல் அறிமுகமான வில்லி, 70 ஒருநாள், 43 டி20 ஆட்டங்களில் முறையே 94, 51 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறாா்.
ஷாஹீன் அஃப்ரிதி நம்பா் 1
பாகிஸ்தான் பௌலா் ஷாஹீன் அஃப்ரிதி, ஒருநாள் கிரிக்கெட் பௌலா்கள் தரவரிசையில் முதல் முறையாக நம்பா் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தாா். 7 இடங்கள் ஏற்றம் கண்ட அவா், 673 புள்ளிகளுடன் இருக்கிறாா். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட் (663), இந்தியாவின் முகமது சிராஜ் (656) அடுத்த இடங்களில் உள்ளனா். வங்கதேசத்துடனான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் சாய்த்த அஃப்ரிதி, நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (16) சாய்த்தவராக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவுடன் இணைந்திருக்கிறாா்.
பட்டாசு வெடிக்கப்படாது
தில்லி மற்றும் மும்பையில் காற்று மாசு பிரச்னை காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதால், அங்கு நடைபெறும் உலகக் கோப்பை ஆட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு பிசிசிஐ தடை வித்துள்ளது. தில்லியில் இன்னும் 1 ஆட்டமும், மும்பையில் 3 ஆட்டங்களும் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவை பிசிசிஐ பிறப்பித்துள்ளது. பொதுவாக ஆட்டத்தின் முடிவில் வெற்றிக்குப் பிறகு அதைக் கொண்டாடும் வகையில் சம்பந்தப்பட்ட மைதானங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.