உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இங்கிலாந்து வீழ்த்தியது.
உலகக் கோப்பைத் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மலன் 140 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 82 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹாசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது மற்றும் ஷகிப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணி 49 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தார். அவர் 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக முஸ்தபிக்குர் ரஹீம் 51 ரன்களும், தௌகித் ஹிரிடாய் 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இறுதியில் 48.2 ஓவர்களின் முடிவில் 227 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், மார்க் வுட், அடில் ரஷீத் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து உலகக் கோப்பைத் தொடரில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.