தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர்களில் ஒருவரான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வெள்ளைப் பந்து போட்டிகளில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளில் அவரை நன்றாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவர் 18 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 1,205 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் அடங்கும். முதல் தர கிரிக்கெட்டில் அண்மையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 372 பந்துகளில் 302* ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டிரிஸ்டன் ஸ்டப்ஸை 3-வது வீரராக களமிறக்க தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3-வது வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி காண்ராட் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு முன்வரிசை ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அவருக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பந்தை அவர் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
அவரது உயரம் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவர்களது பலமாக உள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முன்வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுப்பார் என்றார்.
3-வது இடத்தில் 9 வீரர்களை மாற்றியும் பலனில்லை
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் 9 வெவ்வேறு வீரர்களை 3-வது இடத்தில் களமிறக்கி முயற்சி செய்துள்ளது. இந்த 9 வீரர்களில் கீகன் பீட்டர்சன் ஒருவர் மட்டுமே 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அவரது சராசரி 30-க்கும் குறைவாக உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு தியூனிஸ் டி ப்ரூன் சதம் அடித்திருந்தார். அதன்பின், 3-வது இடத்தில் களமிறங்கிய வீரர்கள் யாரும் சதமடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணியில் 3-வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியவர்கள் மிகக் குறைவானவர்கள் மட்டுமே. 3-வது இடத்தில் களமிறங்கியதில் 4 வீரர்கள் மட்டுமே 1000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளனர். இவர்கள் 4 பேரில் ஹாசிம் ஆம்லாவும் ஒருவர். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 3-வது வீரராக களமிறங்கி குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டவரும் இவரே. டெஸ்ட் போட்டிகளில் அவரது கடைசி 27 சதங்களில் 25 சதங்கள் 3-வது வீரராக களமிறங்கி அடித்ததே.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் 3-வது வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸை களமிறக்க தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் இந்த திட்டம் அந்த அணிக்கு பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.