கராச்சியில் நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான பாகிஸ்தானின் 2ஆவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் நடைபெறும் சாம்பியன்ஷ் டிராபி போட்டிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வங்கதேச அணி கடாபி மைதானத்துக்கு வந்தடைந்தனர். ஆக.14- 16 வரை அங்கு வங்கதேச அணியினர் பயிற்சி மேற்கொள்வார்கள். பின்னர் ஆக.17. ராவல்பிண்டி மைதானத்துக்கு செல்வார்கள். அங்கு 2 நாள்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆக.21-25 வரை நடைபெறவிருக்கிறது. 2020க்கு பிறகு வங்கதேசம் முதல்முறையாக பாகிஸ்தான் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆக. 30- செப். 3 வரை கராச்சியில் நடைபெறும். இந்தப் போட்டிதான் பார்வையாளர்கள் இன்றி மூடிய கதவுகளுடன் நடைபெற உள்ளது.
2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் டிக்கெட்டுக்கான கட்டணம் அவர்களது வங்கிக் கணக்கிற்கே திருப்பி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:
வீரர்களுக்கு தன்னம்பிக்கையும் ஆர்வத்தையும் அளிப்பவர்கள் பார்வையாளர்களே. அதனால் கிரிக்கெட்டில் அவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமென எங்களுக்குத் தெரியும். இருப்பினும், ரசிகர்களின் உடல்நிலை, பாதுகாப்பு அதைவிடவும் முக்கியமானது. அனைத்து விதமான யோசனைகளுக்குப் பிறகு 2ஆவது டெஸ்ட்டினை பார்வையாளர்களின்றி நடத்த முடிவு எடுத்துள்ளோம்.
ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களது வங்கிக் கணக்குகளுக்கு பணம் திருப்பி அனுப்பப்படும். இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து ரசிகர்களுக்கும் எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சாம்பியன்ஸ் டிராபியில் நல்ல அனுபவத்தை தருவதற்காக உழைத்து வருகிறோம்.
1996க்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி போட்டி என்பதால் பார்வையாளர்களுக்கு ஏற்ற மாதிரியான மைதானத்தை அமைக்கும் பொருட்டு அரங்கினை புனரமைப்பு செய்து வருகிறோம் எனக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.