ஜனவரி
17: டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திய தமிழ்நாட்டின் ஆர்.பிரக்ஞானந்தா, ஃபிடே லைவ் ரேட்டிங்கில் செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்தை (2748) பின்னுக்குத் தள்ளி, அதிக புள்ளிகள் (2748.3) வென்ற இந்தியராக சாதனை படைத்தார்.
27: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையரில், உள்நாட்டின் மேத்யூ எப்தெனுடன் இணைந்து கோப்பை வென்ற இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் வென்ற 3-ஆவது இந்தியர் ஆனார்.
27 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையரில் பெலாரஸின் அரினா சபலென்கா கோப்பை வென்றார்.
28: ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையரில் இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன் ஆனார்.
பிப்ரவரி
7: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் ஜஸ்பிரீத் பும்ரா.
18: ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி, தாய்லாந்தை வீழ்த்தி வாகை சூடியது.
மார்ச்
10: பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சீன தைபே கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
30: மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையரில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தெனுடன் இணைந்து சாம்பியனான இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் வாகை சூடிய வயதான வீரர் ஆனார்.
ஏப்ரல்
22: கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியனான தமிழ்நாட்டின் டி.குகேஷ், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற இளம் போட்டியாளர் (17) ஆனார்.
27: உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில், காம்பவுண்ட் ஆடவர், மகளிர், கலப்பு ஆகிய அணிகள் பிரிவிலும், ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவிலும் என 5 தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தியது.
மே
4: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி - மோகன் பகான் சூப்பர் ஜயன்ட்டை வீழ்த்தி (3-1) கோப்பை வென்றது.
17: இந்திய குத்துச்சண்டை வீரர் பிரவீண் ஹூடா, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 22 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். 57 கிலோ எடைப் பிரிவில் அவர் வென்ற ஒலிம்பிக் இடமும் ரத்தானது.
20: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி மகளிருக்கான 400 மீ பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
21: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில், உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், க்ளப் úத்ரா வீராங்கனை ஏக்தா பியான் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
23: உலக யூத் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை பிரீத்திஸ்மிதா, கிளீன் & ஜெர்க் உலக சாதனையுடன் தங்கம் வென்று, போட்டி வரலாற்றில் சாம்பியனான முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
26: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி 2-ஆவது முறையாக பட்டம் வென்றது.
26: ஆசிய சீனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில், மகளிர் வால்ட் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் தீபா கர்மாகர், போட்டி வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்தார்.
ஜூன்
6: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார். சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை கொண்டவர்.
8: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான பிரெஞ்சு ஓபனில், மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் வாகை சூடினார்.
13: உலக ஜூனியர் மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
18: பாவோ நுர்மி தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
29: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலகக் கோப்பை வென்றது.
ஜூலை
13: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வீழ்த்தி செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா பட்டத்தை கைப்பற்றினார்.
14: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் ஆனார்.
21: ஆசியாவிலிருந்து முதல் முறையாக, இந்திய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரங்களான லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
28: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற மானு பாக்கர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
30: ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கர்/சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்றது.
ஆகஸ்ட்
1: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல், ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7: மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகாட், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். எனினும், குறிப்பிட்ட எடையளவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் இறுதிச்சுற்றிலிருந்து தகுதி நீக்கத்துக்கு ஆளானார்.
8: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2-ஆவது பதக்கத்தை கைப்பற்றினார். அதே நாளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது.
9: மல்யுத்தத்தில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
11: பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71-ஆம் இடம் பிடித்தது.
31: பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
செப்டம்பர்
1: இந்திய பாரா உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார், பாரீஸ் பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளி வென்றார்.
2: பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் தனது 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றார்.
3: ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சரத் குமார் வெள்ளியும், தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலமும் வென்றனர்.
4: பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்விந்தர் சிங் பெற்றார்.
6: ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய பாரா வீரர் பிரவீண் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
8: பாரீஸ் பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. சீனா, பிரிட்டன், அமெரிக்கா முறையே முதல் 3 இடங்களைப் பிடிக்க, இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 18-ஆவது இடம் பிடித்து அசத்தியது.
8: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையரில் பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் ஆனார்.
8: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், யுஎஸ் ஓபனில் கோப்பை வென்றார்.
17: இந்திய ஆடவர் ஹாக்கி அணி, சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
22: ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
அக்டோபர்
10: ஆசிய டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
20: துபையில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து முதல் முறையாக கோப்பை வென்றது.
26: நியூஸிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட்டில் தோல்வி கண்ட இந்தியா, கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
நவம்பர்
1: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மான்சி 59 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
20: டென்னிஸ் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (38) ஓய்வு பெற்றார்.
20: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்தியா - சீனாவை வீழ்த்தி (1-0) சாம்பியன் ஆனது.
24: ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக, இந்திய வீரர் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸால் வாங்கப்பட்டார்.
27: ஊக்கமருந்து பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்க மறுத்ததாக, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 4 ஆண்டுகள் தடை விதித்தது.
டிசம்பர்
1: ஐசிசியின் இளம் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா.
10: ஓமனில் நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தானை வீழ்த்தி (5-3) கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
12: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்தியரும், தமிழருமான டி.குகேஷ் சாம்பியனானார். போட்டி வரலாற்றில் வாகை சூடிய மிக இளம் போட்டியாளர் (18) என்ற சாதனை படைத்தார்.
18: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.