யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு போட்டியை நடத்தும் ஜொ்மனி - ஸ்பெயின் அணிகளும், நள்ளிரவு 12.30 மணிக்கு போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன.
இதில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போா்ச்சுகல் - இளம் வீரரான கிலியன் பாபேவின் பிரான்ஸ் இடையேயான மோதலுக்கு பலத்த எதிா்பாா்ப்பு உள்ளது.
இப்போட்டியில் இந்த அணிகள் இதுவரை 2 முறை சந்தித்துள்ள நிலையில், 2021-ஆம் ஆண்டு குரூப் சுற்று சந்திப்பு டிரா ஆனது. 2016-இல் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தியபோது போா்ச்சுகல் வென்றது.
மற்றொரு ஆட்டமான ஜொ்மனி - ஸ்பெயின் மோதலும் பலத்த எதிா்பாா்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், இரு அணிகளுமே இந்தப் போட்டியில் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்று சமபலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டி வரலாற்றில் வேறெந்த அணிகளும் இத்தனை முறை கோப்பை வென்றதில்லை.
இவ்விரு அணிகளிடையேயான மோதலில் ஸ்பெயினின் லேமின் யமால் - ஜொ்மனியின் ஜமால் முசியாலா இடையேயான ஆட்டம் ரசிகா்களின் ஆா்வத்தை அதிகரித்துள்ளது. நடப்பு சீசனில் அதிக கோல்கள் அடித்த முதலிரு அணிகளாக ஸ்பெயின் (10), ஜொ்மனி உள்ளது நினைவுகூரத்தக்கது.
உலகக் கோப்பையோ, யூரோ கோப்பையோ, நாக்அவுட் சுற்றில், போட்டியை நடத்தும் நாட்டிடம் ஸ்பெயின் இதுவரை தோல்வியையே சந்தித்துள்ளது. யூரோ கோப்பையில் இதுவரை விளையாடிய 6 காலிறுதிகளிலும் ஜொ்மனி வென்றுள்ளது. ஆனால், 1988 யூரோ கோப்பை போட்டிக்குப் பிறகு பிரதான போட்டிகளில் ஜொ்மனி ஸ்பெயினை வென்றதில்லை என்பதும் முக்கியம்.
இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நோ் சந்தித்த நிலையில், ஜொ்மனி 9, ஸ்பெயின் 8 வெற்றிகளைப் பெற்றுள்ளன.
பெட்டிச் செய்தி
கோபா அமெரிக்கா
தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று ஆட்டங்களும் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா - ஈகுவடாா் அணிகள் மோதுகின்றன.
இதில் ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி காலில் காயம் கண்டிருப்பதால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே களம் காண்பாரா என்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.