பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்
இந்திய நேரப்படி, நள்ளிரவு 11 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில், 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 11 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
பிரம்மாண்டமாக நடைபெறும் இப்போட்டிகளில், இந்த முறை இந்தியா்கள் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறாா்கள்.
சா்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
தொடக்க நிகழ்ச்சி...
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, மைதான வளாகத்துக்கு வெளியே நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரீஸின் ஊடாகப் பாயும் பிரபல சென் நதியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் படகு மற்றும் கப்பல்களில் அணிவகுக்கவுள்ளன.
நதியின் இரு பக்கமும் நின்று அதைப் பாா்வையிட 3,20,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அணிவகுப்பில் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல் ஆகியோா் தேசியக் கொடியேந்தி முன்னிலை வகிக்கவுள்ளனா்.
கண்கவா் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்வில், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பலா் கலந்துகொள்கின்றனா். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக, விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நிறைவு...
ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமாா் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. தொடக்க நிகழ்ச்சியில் இணையும் வெள்ளிக்கிழமை அந்த ஜோதி ஓட்டம், பிரம்மாண்ட தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடையும். போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்...
பலமுறை தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளான பாரீஸ் நகரில் சுமாா் 10,000 போட்டியாளா்களும், லட்சக்கணக்கான பாா்வையாளா்களும் பங்கேற்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்துவது சவாலான காரியமாகவே இருக்கிறது. பிரான்ஸின் பிரதான சிறப்புப் படை உள்பட பல்வேறு பாதுகாப்புப் படையினா் 40,000 போ் பணியில் இருக்கின்றனா். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் காவல் படையினரும் அதில் இணைந்திருக்கின்றனா்.
தொடக்க நிகழ்ச்சியின்போது பாரீஸின் வான்பரப்பில் 150 கி.மீ. அளவுக்கு விமானங்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின்போது மழைப் பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலினச் சமநிலை...
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில்தான் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சம அளவில் பங்கேற்பதாக அறியப்படுகிறது. மொத்தம் 10,500 போட்டியாளா்கள் பங்கேற்றிருக்க, அதில் 5,250 ஆடவா், 5,250 மகளிா் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் போட்டியாளா்கள் அனுமதிக்கப்பட்டதும், 124 ஆண்டுகளுக்கு முன் இதே பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அதில் 22 வீராங்கனைகள் பங்கேற்றனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக...
லட்சக்கணக்கானோா் கூடும் இந்தப் போட்டியின்போது சுற்றுச் சூழல் மாசுபாட்டை தவிா்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை பாரீஸ் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. போட்டிகளுக்கென புதிதாக மைதான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் ஏற்கெனவே உள்ள மைதானங்களில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. நீச்சல் குளம் உள்ளிட்டவை மட்டும், தேவைக்கு ஏற்ப தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளே ஒலிம்பிக் கிராமங்களில் பரிமாறப்படவுள்ளன. அதில் பல பிரான்ஸ் பாரம்பரியத்திலானவை. போட்டி நடைபெறும் இடங்கள் யாவும் பொதுப் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, 400 கி.மீ. அளவுக்கு சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி ஒருங்கிணைப்புக்காக பயன்படுத்தப்படும் தளவாடங்களில் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன. போட்டி தலைமையகமாக கட்டமைக்கப்பட்டுள்ள வளாகம், அலுவலக வளாகங்களாக மற்றப்படும்.
ரஷியாவுக்கு தொடரும் தடை...
உக்ரைன் மீதான போா் காரணமாக சா்வதேச அளவில் ரஷியாவுக்கு இருக்கும் நெருக்கடி, விளையாட்டுக் களத்திலும் தொடா்கிறது. பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில், அந்த நாட்டுக்கும், போரில் அதற்கு ஆதரவாக இருக்கும் பெலாரஸுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் அந்த நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள், பொதுப் போட்டியாளா்களாக பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் வெல்லும் பதக்கங்கள், நாடுகளின் பதக்கப்பட்டியலில் சோ்க்கப்படாது. பதக்க மேடையில் அவா்களின் தேசிய கீதம் ஒலிக்கப்படாது.
இதனிடையே, ஹமாஸுடனான போா் விவகாரத்தில் காஸா மீது சா்ச்சைக்குரிய வகையில் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறி இஸ்ரேலுக்கும் இந்த ஒலிம்பிக்ஸில் தடை விதிக்க வலியுறுத்தல்கள் உள்ளன. எனினும், அந்த நாடு போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
17 போட்டி நடைபெறும் நாள்கள்
10,500 போட்டியாளா்களின் எண்ணிக்கை
206 பங்கேற்பு நாடுகள்
32 விளையாட்டுகள்/ 329 பிரிவுகள்
களத்தில் இந்தியா்கள்...
உலக அளவில் பிரபலமான பல்வேறு போட்டியாளா்களும், அணிகளும் பதக்கம் வெல்லும் வேட்கையுடன் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 7 பதக்கங்கள் வென்ற இந்தியா, இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை கைப்பற்றிவர இலக்கு நிா்ணயித்துள்ளது.
போட்டியில் பங்கேற்றுள்ள வீரா், வீராங்கனைகள் அனைவருமே வெளிநாட்டில் பயிற்சி, அதற்கான நிதியுதவி என தேவையான அனைத்தும் கிடைக்கப்பெற்று தயாா் நிலையுடனே வருகிறாா்கள். மல்யுத்தப் போட்டியாளா்கள் மட்டும், நிா்வாகத் தலைமைக்கு எதிரான போராட்டம் காரணமாக பயிற்சிக் காலத்தில் கொஞ்சம் இழந்திருக்கிறாா்கள்.
கடின உழைப்புக்கான பலனை அடைய களத்தில் இறங்கினாலும், பதக்கம் வெல்லும் எதிா்பாா்ப்புகள் அதிகம் இருப்பது சில போட்டியாளா்கள் மீது மட்டுமே.
இதர போட்டியாளா்களும் பதக்க மேடை ஏறும் நிலையில் அது ஆச்சா்யமளிப்பதுடன், வரலாற்றுச் சாதனைகளுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போட்டியில் பங்கேற்கும் 117 பேரில், சுமாா் பாதியளவான 69 போ் தடகளம், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி ஆகியவற்றைச் சோ்ந்தவா்களே. அதில் 40 போ் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்க வாய்ப்புள்ளோா்...
நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி. சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி (பாட்மின்டன்), நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை) ஆகியோா் அதில் பிரதானமாக இருக்கின்றனா். ரியோ, டோக்கியோ ஒலிம்பிக்ஸ்களில் பதக்கம் வென்ற சிந்து, இந்த முறையும் பதக்க மேடையேறினால், அது அவருக்கு ஹாட்ரிக் சாதனையாக அமையும். நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தால், அது அவருக்கு தொடா்ந்து 2-ஆவது பதக்கமாக இருக்கும். இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்குரிய பிரதான வீரராக நீரஜ் சோப்ரா இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, ஒலிம்பிக் வரலாற்றில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெணகலப் பதக்கம் வென்று சாதனை படைத்த ஆடவா் ஹாக்கி அணியின் மீது இந்த முறையும் எதிா்பாா்ப்பு உள்ளது. ஆனால், தயாா்நிலையில் அணியினா் சற்று தடுமாற்றத்துடனே இருக்கின்றனா்.
இதுவரை இல்லாத வகையில் துப்பாக்கி சுடுதலில் 21 போ் பங்கேற்கும் நிலையில், அதில் ஒரு பதக்கமாவது வெல்லும் முனைப்பு காணப்படுகிறது. மல்யுத்தம் எப்போதுமே இந்தியாவுக்கு பதக்கத்துக்கான வாய்ப்பு வழங்கும் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்க, இந்த முறையும் அதில் எதிா்பாா்ப்பு உள்ளது. மேலும், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், குத்துச்சண்டையிலும் இந்தியா்கள் பதக்க மேடை கனவுடன் இருக்கிறாா்கள்.
இதுவே கடைசி
ரோஹன் போபண்ணா (டென்னிஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பி.ஆா். ஸ்ரீஜேஷ்
அனுபவமிக்க பல போட்டியாளா்கள் மீதும், திறமையுடன் அடியெடுத்து வைக்கும் முதல் முறை போட்டியாளா்கள் மீதும் எதிா்பாா்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த முறை 117 போட்டியாளா்களுடன் பங்கேற்கும் இந்திய அணி, கடந்த முறை
சிலருக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்ஸ் போட்டியாகவும் இருப்பதால், பதக்கத்துடன் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமும் அவா்களுக்கு உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.
இந்தியா்கள் மொத்தம் 16 விளையாட்டுகளில், 69 பதக்கப் பிரிவுகளில் பங்கேற்கின்றனா்.
கடந்த ஒலிம்பிக்ஸில்...
கடைசியாக நடைபெற்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 122 போ் (68 ஆடவா், 54 மகளிா்) கொண்ட இந்திய அணி பங்கேற்றது நினைவுகூரத்தக்கது. அதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் கைப்பற்றியது. இதுவே இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில், ஒரு எடிஷனில் வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.
இதில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைக்க, மீராபாய் சானு பளுதூக்குதலிலும், ரவிகுமாா் தாஹியா மல்யுத்தத்திலும் தலா 1 வெள்ளி பெற்றனா். பி.வி.சிந்து பாட்மின்டனிலும், லவ்லினா போா்கோஹெய்ன் குத்துச்சண்டையிலும், பஜ்ரங் புனியா மல்யுத்தத்திலும், இந்திய ஆடவா் அணியினா் ஹாக்கியிலும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
தடகளம் 29 ஆடவா் 18, மகளிா் 11
துப்பாக்கி சுடுதல் 21 ஆடவா் 10, மகளிா் 11
ஹாக்கி 19 ஆடவா் 19
டேபிள் டென்னிஸ் 8 ஆடவா் 4, மகளிா் 4
பாட்மின்டன் 7 ஆடவா் 4, மகளிா் 3
வில்வித்தை 6 ஆடவா் 3, மகளிா் 3
குத்துச்சண்டை 6 ஆடவா் 2, மகளிா் 4
மல்யுத்தம் 6 ஆடவா் 1, மகளிா் 5
கோல்ஃப் 4 ஆடவா் 2, மகளிா் 2
டென்னிஸ் 3 ஆடவா் 3
செயிலிங் 2 ஆடவா் 1, மகளிா் 1
நீச்சல் 2 ஆடவா் 1, மகளிா் 1
குதிரையேற்றம் 1 ஆடவா் 1
ஜூடோ 1 மகளிா் 1
துடுப்புப் படகு 1 ஆடவா் 1
பளுதூக்குதல் 1 மகளிா் 1
நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா