ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி
22 ரன்களே கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த தமிழ்நாடு பெளலர் குர்ஜப்னீத் சிங், ஆட்டநாயகன் ஆனார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிர அணியை திங்கள்கிழமை வென்றது.
22 ரன்களே கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த தமிழ்நாடு பெளலர் குர்ஜப்னீத் சிங், ஆட்டநாயகன் ஆனார்.
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த செளராஷ்டிரம், 77 ஓவர்களில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில், மிடில் ஆர்டரில் வந்த அர்பித் வசவடா 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே அதிகபட்சமாகும். தமிழ்நாடு பெளலர்களில் சோனு யாதவ், எம்.முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் தனது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, 121.3 ஓவர்களில் 367 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நாராயண் ஜெகதீசன் 11 பவுண்டரிகளுடன் 100, சாய் சுதர்சன் 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் அடித்தனர். செளராஷ்டிர பெளலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்.
அடுத்து, முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய செளராஷ்டிரம் 40.4 ஓவர்களில் 94 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்னீத் சிங் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.