இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் சனிக்கிழமை மோதுகிறது.
போட்டியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலுமே வெற்றி கண்ட ஒரே அணியாக இருக்கும் நடப்பு சாம்பியன் இந்தியா, தற்போது பாகிஸ்தானையும் வீழ்த்தி தோல்வியே காணாமல் லீக் சுற்றை நிறைவு செய்யும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணியோ 2 வெற்றி, 2 டிராக்களுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது.
இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதும் போல் ரசிகா்களுக்கு மட்டுமல்லாமல், இரு அணி வீரா்களிடையேயும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2022 ஆசிய கோப்பை என பாகிஸ்தானுடனான முந்தைய ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் கையே ஓங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, இதர ஆட்டங்களில் மலேசியா - தென் கொரியாவுடனும், சீனா - ஜப்பானுடனும் மோதுகின்றன.