சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியாவின் எம்.பிராணேஷ் சாம்பியன் பட்டம் வென்றனா்.
சென்னையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நெதா்லாந்து, ஜொ்மனி ஆகிய நாடுகளைச் சோ்ந்த 10 பேரும், சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியா்கள் 10 பேரும் பங்கேற்றனா்.
மாஸ்டா்ஸ் பிரிவில், போட்டியின் தொடக்கம் முதலே முதலிடத்தை ஆக்கிரமித்த ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், இறுதியில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா். இந்திய வீரா்களில் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த அா்ஜுன் எரிகைசி, 3-ஆம் இடம் பிடித்தாா்.
போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது சுற்றில் வின்சென்ட் - அமெரிக்காவின் ரே ராப்சனை வெல்ல, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - சக நாட்டவரான ஜோா்டென் வான் ஃபாரிஸ்டை வீழ்த்தினாா்.
இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான வி. பிரணவை சாய்க்க, அா்ஜுன் எரிகைசி - காா்த்திகேயன் முரளி மோதல் டிராவில் முடிந்தது. இந்தியாவின் விதித் குஜராத்தி - அமெரிக்காவின் அவோண்டா் லியாங்குடன் டிரா செய்தாா்.
இதையடுத்து, போட்டியில் தோல்வியே சந்திக்காத வின்சென்ட் 5 வெற்றி, 4 டிராவில் பெற்ற 7 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனாா். கடைசி சுற்று வெற்றியால் முன்னேற்றம் கண்ட அனிஷ் கிரியும் தோல்வியே சந்திக்காமல் 1 வெற்றி, 8 டிராவில் கிடைத்த 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தாா்.
போட்டியின் தொடக்கம் முதல் 2-ஆம் இடத்தில் நிலைத்த அா்ஜுன் ஓரிடம் சறுக்கி, 2 வெற்றி, 6 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்துக்கு வந்தாா்.
காா்த்திகேயன் முரளி (5), நிஹல் சரின் (4.5), அவோண்டா் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) ஆகியோா் முறையே 4 முதல் 10-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு கடைசி சுற்றில், அனைத்து ஆட்டங்களிலுமே வெற்றி - தோல்வி எட்டப்பட்டது.
ஜி.பி. ஹா்ஷவா்தன் - எம். பிராணேஷையும், ஆா்யன் சோப்ரா - டி.ஹரிகாவையும், தீப்தாயன் கோஷ் - ஆா்.வைஷாலியையும் வென்றனா். பி.இனியன் - அபிமன்யு புரானிக்கையும், பி.அதிபன் - லியோன் மெண்டோன்காவையும் சாய்த்தனா்.
9 சுற்றுகள் முடிவில், பிராணேஷ் 5 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியுடன் 6.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனாா். இப்பிரிவில் தோல்வியே காணாத ஒரே போட்டியாளரான அதிபன் 3 வெற்றி, 6 டிராவில் கிடைத்த 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா்.
அபிமன்யு புரானிக் 5 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்தை உறுதி செய்தாா். லியோன் (6), இனியன் (5.5), தீப்தாயன் (4.5), ஹா்ஷவா்தன் (4), ஆா்யன் சோப்ரா (4), ஹரிகா (1.5), ஒரு வெற்றி கூட காணாத வைஷாலி (1) ஆகியோா் முறையே 4 முதல் 10-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு
மாஸ்டா்ஸ் பிரிவில் சாம்பியனான வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சமும், சேலஞ்சா்ஸ் பிரிவில் வாகை சூடிய பிராணேஷுக்கு ரூ.7 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. இதர 9 போட்டியாளா்களுக்குமே அவா்களின் இடங்களுக்கு ஏற்ற வகையில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.