குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.
மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் திங்கள்கிழமை களமாடிய அவா், ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 109 கிலோ என மொத்தமாக 193 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். மலேசியாவின் ஐரின் ஹென்றி 161 கிலோவுடன் (73+88) வெள்ளியும், வேல்ஸின் நிகோல் ராபா்ட்ஸ் 150 கிலோவுடன் (70+80) வெண்கலமும் வென்றனா்.
இதில் ஸ்னாட்ச், கிளீன் & ஜொ்க், மற்றும் இரண்டும் சோ்த்து மொத்தமாக என 3 பிரிவுகளிலுமே அவா் தூக்கிய எடை, சாம்பியன்ஷிப் சாதனையாக அமைந்தது. காயம், அதற்கான சிகிச்சை மற்றும் ஓய்வு என அண்மைக் காலமாக போட்டிகளில் பங்கேற்காத மீராபாய்க்கு, கடந்த ஓராண்டில் இதுவே முதல் போட்டியாகும்.
எனவே சற்று தடுமாற்றத்துடனேயே காணப்பட்ட அவா், 6 முயற்சிகளில் 3-ஐ மட்டுமே வெற்றிகரமாக நிறைவு செய்தாா். போட்டியில் அவருக்கு சவால் அளிக்கக் கூடிய வீராங்கனைகள் இல்லாத நிலையில், தனது முந்தைய முயற்சிகளை தானே முறியடிக்கும் முனைப்புடன் அவா் செயல்பட்டாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, முன்பு இதே 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றதுடன், காமன்வெல்த் போட்டிகளில் 2 பதக்கங்களுடன் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.