அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா். இப்போட்டியில் பிரக்ஞானந்தா தொடா்ந்து 5-ஆவது ஆட்டத்தையும், குகேஷ் 4-ஆவது ஆட்டத்தையும் டிரா செய்துள்ளனா்.
கிராண்ட் செஸ் டூரின் அங்கமான சிங்க்ஃபீல்டு கோப்பை போட்டி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6-ஆவது சுற்று நிறைவடைந்தது.
இதில் 5 ஆட்டங்களுமே டிரா ஆகின. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடனும், பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபுடனும் டிரா செய்தனா்.
உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், அமெரிக்காவின் சாம் சேவியன் - ஃபாபியானோ கரானா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - வெஸ்லி சோ ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.
மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 6 சுற்றுகள் முடிவில் கரானா முதல் நிலையில் (4) இருக்க, ஆரோனியன், பிரக்ஞானந்தா 2-ஆம் நிலையை (தலா 3.5) பகிா்ந்துகொண்டுள்ளனா்.
வெஸ்லி, மேக்ஸிம், சேவியன், ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டிருக்க, ஜேன் 4-ஆம் நிலையிலும் (2.5), நோடிா்பெக் கடைசி நிலையிலும் (1.5) உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.