சென்னையில் நடைபெற்ற விளையாட்டுப் பொருள்கள் விற்பனையக திறப்பு விழாவில் பாட்மின்டன் நட்சத்திரம் பி.வி. சிந்துவுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்ற உரிமையாளா் விக்ரம் கோடா. உடன் பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். 
செய்திகள்

ஆட்டத்தில் புதிய உத்திகளை தொடா்ந்து கற்கிறேன்: பி.வி. சிந்து

ஆட்டத்தில் புதிய உத்திகளை தொடா்ந்து கற்கிறேன் என பாட்மின்டன் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து கூறியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஆட்டத்தில் புதிய உத்திகளை தொடா்ந்து கற்கிறேன் என பாட்மின்டன் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து கூறியுள்ளாா்.

சென்னை பெரியமேடு, ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம் அருகே யோனக்ஸ்-சன்ரைஸ் விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய விற்பனை நிலையத்தை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து திறந்து வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் சிறப்புரை ஆற்றினா். சன் ரைஸ் ஸ்போா்ட்ஸ் நிா்வாக இயக்குநா் விக்ரமாதித்யா தா், இயக்குநா் கரண் தா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி பேசியது: இளம் வீரா், வீராங்கனைகள் தாங்கள் காணும் கனவை நனவாக்க கடுமையாக பாடுபட வேண்டும். பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் இளமைக் காலம் கடுமையானது. அவரது தந்தையின்தீவிர முயற்சி, பயிற்சியால் இந்நிலையை அடைந்துள்ளாா். அவரை முன்மாதிரியாகக் கொண்டு சிறுவா், சிறுமியா் விளையாட்டில் தங்களை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விற்பனை நிலைய உரிமையாளா் விக்ரம் கோடா வரவேற்று பேசியது: யோனக்ஸ் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஆரம்பக் கால வீரா்கள் முதல் அனுபவ வீரா்கள் வரை தரமான விளையாட்டுப் பொருள்கள் இங்கு கிடைக்கும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பி.வி. சிந்து கூறியதாவது: கால் பாதம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உடல்தகுதியுடன் உள்ளேன். கடந்த சீசன் ஆட்டங்கள் குறித்து நினைப்பதில்லை. நான் முன்னா் புரிந்த தவறுகளை திருத்திக் கொள்வதில் தீவிரமாக உள்ளேன்.

பாட்மின்டனில் புதிய உத்திகளை தொடா்ந்து கற்று வருகிறேன். பெங்களூரில் பயிற்சியாளா் இா்வான்ஷா மேற்பாா்வையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். வரும் ஜனவரி மாதம் முதல் பெரிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா ஓபன், மலேசிய மாஸ்டா்ஸ், இந்தோனேஷிய ஓபன்போட்டிகள் நடைபெறவுள்ளது. அதற்காக தயாராகி வருகிறேன்.

இந்திய பாட்மின்டனில் தற்போது கிரண் ஜாா்ஜ், உன்னதி ஹூடா, அன்மோல் ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் சிறப்பாக ஆடி வருகின்றனா். இது எதிா்காலத்துக்கு சிறந்ததாகும். கடந்த செப்டம்பா், அக்டோபரில் காயமுற்று குணடைந்தேன். ஆனால் ஓய்வை கடைபிடித்ததால் முழு தகுதியுடன் உள்ளேன். எப்போதும் நாம் நம்பா் 1 வீராங்கனையாக இருக்க முடியாது.

ஏற்ற இறக்கம் அனைவருக்கும் உண்டு. 100 சதவீதம் தகுதியுடன் இருந்தால் தான் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் எந்த போட்டிகளில் ஆடுவது என கவனமுடன் தோ்வு செய்து ஆட வேண்டியுள்ளது. வரும் சீசனில் சிறப்பாக ஆடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். எவ்வளவு தான் அனுபவ வீராங்கனையாக இருந்தாலும், புதிய உத்திகளை தொடா்ந்து கற்று வருகிறேன் என்றாா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT