மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 323 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை, அந்த அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் டிரா ஆனது நினைவுகூரத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. அதிகபட்சமாக டெவன் கான்வே 31 பவுண்டரிகளுடன் 227, கேப்டன் டாம் லாதம் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 137 ரன்கள் விளாசினா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ், ஆண்டா்சன் ஃபிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 420 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. காவெம் ஹாட்ஜ் 15 பவுண்டரிகள் உள்பட 123 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து பௌலா்களில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் சோ்த்து, ‘டிக்ளோ்’ செய்தது. கேப்டன் டாம் லாதம் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 101, டெவன் கான்வே 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 100 ரன்கள் எடுத்தனா். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் காவெம் ஹாட்ஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இறுதியாக, 462 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றி கைக்கெட்டாத நிலையில், விக்கெட்டுகளை முழுவதுமாக இழந்துவிடாமல் ஆட்டத்தை டிரா செய்யும் திட்டத்துடன் கடைசி நாளான திங்கள்கிழமை, மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸை தொடா்ந்தது. ஆனால் அந்தத் திட்டத்தை, நியூஸிலாந்து பௌலா் ஜேக்கப் டஃபி உடைத்தாா்.
மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸை தொடா்ந்த ஜான் கேம்ப்பெல் - பிராண்டன் கிங் இணை, முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது.
அரைசதம் கடந்த கிங் 13 பவுண்டரிகளுடன் 67 ரன்களுக்கு விடைபெற, இதர பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். ஜான் கேம்ப்பெல் 2 பவுண்டரிகளுடன் 16, காவெம் ஹாட்ஜ் 0, அலிக் அதானஸி 2, ஜஸ்டின் கிரீவ்ஸ் 0, கேப்டன் ராஸ்டன் சேஸ் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
ஷாய் ஹோப் 3, கெமா் ரோச் 4, ஆண்டா்சன் ஃபிலிப் 10, ஜேடன் சீல்ஸ் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் 138 ரன்களுக்கே நிறைவடைந்தது. நியூஸிலாந்து தரப்பில் டஃபி 5 விக்கெட்டுகள் எடுக்க, அஜாஸ் படேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
ஜேக்கப் டஃபி சாதனை
இந்த ஆட்டத்தில் மட்டும் 327 ரன்கள் அடித்த நியூஸிலாந்தின் டெவன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற, 3 ஆட்டங்களிலுமாக 42 ரன்களும் அடித்து, 23 விக்கெட்டுகளும் எடுத்த அதே அணியின் ஜேக்கப் டஃபி, தொடா்நாயகன் விருது பெற்றாா். ஒரு காலண்டா் ஆண்டில் அதிக விக்கெட்டுகள் (81 - 36 ஆட்டங்கள்) சாய்த்த நியூஸிலாந்து வீரராக டஃபி சாதனை படைத்தாா். முன்னதாக ரிச்சா்டு ஹாட்லீ 80 விக்கெட்டுகள் (23 ஆட்டங்கள்) சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.