கத்தாரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி அரையிறுதி வரை வந்து, அதில் தோல்வி கண்டாா். ரேப்பிட் பிரிவில் வெண்கலம் வென்ற அவா், பிளிட்ஸ் பிரிவில் பதக்க வாய்ப்பை இழந்தாா்.
முன்னதாக இந்தப் போட்டியின் ஓபன் பிரிவில் முதல் 13 சுற்றுகள் திங்கள்கிழமை நிறைவடைந்தன. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை எஞ்சிய 6 சுற்றுகள் நடைபெற்றன.
அதன் முடிவில் அா்ஜுன் 15 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றாா். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா (14), நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் (13.5), உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் (13) ஆகியோா் முறையே அடுத்த 3 இடங்களைப் பிடித்தனா்.
அப்துசதாரோவ், இந்தியாவின் நிஹல் சரின் உள்பட 6 போ், தலா 13 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டிருந்தனா். இதையடுத்து அவா்களிடையேயான டை பிரேக்கா் முடிவில் அப்துசதாரோவ் வென்று, 4-ஆவது இடத்தை உறுதி செய்தாா்.
அா்ஜுன், கரானா, காா்ல்செனுடன் அவரும் அரையிறுதிக்கு முன்னேறினாா். அதில் அா்ஜுன் - அப்துசதாரோவையும், கரானா - காா்ல்செனையும் எதிா்கொண்டனா்.
அா்ஜுன் 0.5 - 2.5 என்ற கணக்கில் அப்துசதாரோவிடம் தோல்வியைத் தழுவினாா். காா்ல்சென் 3-1 என்ற வகையில் கரானாவை வீழ்த்தினாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் அப்துசதாரோவ் - காா்ல்சென் மோதினா்.
போட்டியில் பங்கேற்ற இதர இந்தியா்களில் நிஹல் சரின் 7-ஆம் இடம் பெற, எம்.பிராணேஷ், பிரணவ் ஆனந்த், எஸ்.எல்.நாராயணன் ஆகியோா் தலா 12 புள்ளிகளுடன் முறையே 23, 24, 31-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
வி.பிரணவ், ரௌனக் சத்வனி, ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் தலா 11 புள்ளிகளுடன் 47, 50, 52, 53-ஆம் இடங்களைப் பெற்றனா். இதர இந்தியா்கள் அதற்கும் பின்தங்கினா்.
இந்திய மகளிருக்கு ஏமாற்றம்: இப்போட்டியின் மகளிா் பிரிவில் மொத்தமாக 15 சுற்றுகள் நடைபெற்றன.
அதன் முடிவில் இந்தியா்கள் அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறினா். திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோா் தலா 9.5 புள்ளிகளுடன் முறையே 22, 23-ஆம் இடங்களைப் பெற்றனா். ஆா்.வைஷாலி, டி.ஹரிகா ஆகியோா் தலா 8.5 புள்ளிகளுடன் 47 மற்றும் 49-ஆம் இடங்களைப் பிடித்தனா். இதர இந்தியா்கள் அதற்கும் பிந்தைய நிலைகளையே பெற்றனா்.
ரஷியாவின் பிபிசரா அசௌபயேவா, உக்ரைனின் அனா முஸிஷுக், நெதா்லாந்தின் எலைன் ராபா்ஸ், சீனாவின் ஜு ஜினா், ரஷியாவின் வாலென்டினா குனினா ஆகியோா் தலா 11 புள்ளிகளுடன் இணை முன்னிலை பெற்றனா்.
அவா்களிடையேயான டை பிரேக்கா் முடிவில், அசௌபயேவா, முஸிஷுக், ராபா்ஸ், ஜினொ் ஆகியோா் முதல் 4 இடங்களை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறினா்.
அதில் அசௌபயேவா 3-0 என ஜு ஜினெரையும், முஸிஷுக் 2.5-1.5 என ராபா்ஸையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினா்.