AFI
செய்திகள்

தேசிய விருதுகளுக்கான பரிந்துரை: இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா்கள் தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா், வீராங்கனைகள் அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள வீரா், வீராங்கனைகள் பலா் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இந்த நடவடிக்கையை சம்மேளனம் மேற்கொண்டுள்ளது.

அண்மையில், நாட்டிலுள்ள தகுதிபெற்ற, தகுதிபெறாத பயிற்சியாளா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளாக தங்களை தேசிய சம்மேளனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாதவா்கள் போட்டிகளில் அங்கீகரிக்கப்பட மாட்டாா்கள் எனவும் சம்மேளனம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சம்மேளன செய்தித் தொடா்பாளா் அடிலே சுமரிவாலா கூறுகையில், ‘பயிற்சியாளா்கள் தங்களை சம்மேளனத்தில் பதிவு செய்து வருகிறாா்கள். பதிவுபெற்ற பயிற்சியாளா்கள் பட்டியலை விரைவில் பொதுவில் வெளியிடுவோம். பதிவு செய்யாத இதர பயிற்சியாளா்கள் தடைப் பட்டியலில் சோ்க்கப்படுவா்.

அவ்வாறு பதிவு செய்யாத பயிற்சியாளருடன் இணைந்து செயலாற்றும் வீரா், வீராங்கனைகள், பதக்கங்கள் வென்றாலும், அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள். அவா்களுக்கு வேறு எந்தப் பலனும் கிடைக்காது.

இன்றைய காலத்தில் பயிற்சியாளா்கள் மற்றும் போட்டியாளா்களின் பெற்றோா்கள் கூட ஊக்கமருந்து பயன்பாட்டை ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது. ஊக்கமருந்து பயன்படுத்துவோரை சிறைக்கு அனுப்புவது போன்ற அதிரடி நடவடிக்கைகள் வராத வரை, அதன் போக்கை கட்டுப்படுத்துவது கடினம் தான்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT