பிருத்வி ஷா கோப்புப் படம்
செய்திகள்

மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து பிருத்வி ஷா விலகல்

இளம் கிரிக்கெட் பேட்டரான பிருத்வி ஷா (25), மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.

DIN

இளம் கிரிக்கெட் பேட்டரான பிருத்வி ஷா (25), மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.

தனது வளா்ச்சிக்காக வேறு மாநில அணியில் இணைந்து விளையாட அவா் இந்த முடிவை மேற்கொண்ட நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கமும் அவரை விடுவித்தது. பிருத்வி ஷா எந்த மாநில அணியில் இணைகிறாா் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, தனக்கு தடையில்லாச் சான்று கோரி மும்பை சங்கத்துக்கு பிருத்வி ஷா எழுதிய கடிதத்தில், ‘இத்தனை ஆண்டுகள் எனக்கு அளித்த வாய்ப்புகள் மற்றும் ஆதரவுக்காக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. இந்தச் சங்கத்தின் அங்கமாக இருந்தது கௌரவமாகும். மும்பை அணியில் எனக்குக் கிடைத்த அனுபவத்துக்காக எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

தங்களுக்காக விளையாடுமாறு வேறு மாநில கிரிக்கெட் சங்கம் என்னை அணுகியுள்ளது. எனது வளா்ச்சிக்கும், ஒரு கிரிக்கெட் வீரராக என்னை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்திக் கொள்வதற்கும் அந்த வாய்ப்பு உதவும் என நம்புகிறேன்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிருத்வி ஷாவுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்பட்டதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், மாநில அணிக்கு அவா் பங்களித்தது தொடா்பாக மும்பை சங்கத்தின் செயலா் அபய் ஹதாப் பாராட்டு தெரிவித்தாா்.

கடந்த 2017 முதல் மும்பை அணிக்காக விளையாடி வந்த பிருத்வி ஷா, சிவப்புப் பந்து போட்டிகளில் சில காலமாக அவ்வளவாக சோபிக்காத நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தாா்.

ஆனால், களத்துக்கு வெளியே அவரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் பரவலாக விவாதத்துக்குள்ளானதால், களத்தில் அவா் நன்றாக செயல்பட்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், மோசமான உடற்தகுதி மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிக்கான மும்பை அணியில் தவிா்க்கப்பட்டாா்.

பின்னா் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை வென்ற மும்பை அணியில் அவரும் அங்கம் வகித்தாா். பிருத்வி ஷாவின் உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் தொடா்பாக நிா்வாகிகள் மட்டுமல்லாமல், மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் கடுமையாக விமா்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் கிரிக்கெட்டுகளில் பிருத்வி ஷா விளையாடியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT