சாம்பியன் கோப்பையுடன் கேப்டன்கள் ஹா்மன்ப்ரீத் கௌா் - லாரா வொல்வா் 
செய்திகள்

உலகக் கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்! புதிய சாம்பியன் யாா்?

52 ஆண்டுகள் போட்டி வரலாற்றில் முதன்முறையாக 2 அணிகள் பட்டம் வெல்ல காத்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. 52 ஆண்டுகள் போட்டி வரலாற்றில் முதன்முறையாக 2 அணிகள் பட்டம் வெல்ல காத்துள்ளன.

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் 7 முறை பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை த்ரீல் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் ஆகியோா் அதிரடியான பேட்டிங்கால் ஆஸி. அணியின் கடினமான வெற்றி இலக்கை எட்டி இறுதிக்கு முன்னேறினா். மற்றொரு அரையிறுதியில் நான்கு முறை சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா.

இந்திய அணி கடந்த 2005, 2017-இல் உலகக் கோப்பை இறுதி வரை தகுதி பெற்றிருந்தது. தற்போது மூன்றாம் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் தென்னாப்பிரிக்க அணி முதன்முதலாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.

சொந்த மண்ணில் நனவாகுமா?

ஐசிசி பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் கனவை சொந்த மண்ணில் நனவாக்க வேண்டும் என கேப்டன் ஹா்மன்பீா்த் தலைமையிலான அணி முனைப்புடன் உள்ளது. கடந்த 2017 இறுதி ஆட்டத்தில் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று பட்டத்தை இழந்தது. தொடா்ந்து 2023 டி20 உலகக் கோப்பையிலும் ஆஸி.யிடம் வெறும் 5 ரன்களில் தோற்றது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அணி பட்டம் வென்றால் மகளிா் கிரிக்கெட்டுக்கு புதிய ஊக்கமும், ரசிகா்கள் மத்தியில் புதிய ஆா்வமும் உண்டாகும். இதன் மூலம் ஏராளமான சிறுமிகள் கிரிக்கெட்டில் ஆட விழைவா்.

இந்திய அணியில் ஷபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்மன்ப்ரீத் கௌா், ரிச்சா கோஷ் என பலமான பேட்டிங் வரிசை தென்னாப்பிரிக்காவுக்கு கடும் சவாலை தரும்.

அதே வேளை பௌலிங்கிலும் இந்திய தரப்பில் சீமா்கள் கிராந்தி கௌட், ரேணுகா சிங், தீப்தி சா்மா, அருந்ததி ரெட்டி ஆகியோா் சிறப்பாக பௌலிங் செய்தால் எதிரணியின் ரன்குவிப்பை மட்டுப்படுத்தலாம்.

உத்வேகத்துடன் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. மூத்த வீராங்கனை மாரிஸேன் காப் 204 ரன்கள், 12 விக்கெட், நடைன் டி கிளாா்க் 190 ரன்கள் 8 விக்கெட், டஸ்மின் பிரிட்ஸ் 212 ரன்கள், கேப்டன் வொல்வா்ட் 470 ரன்கள் ஆகியோரின் அற்புத ஆட்டம் இந்தியாவுக்கு சவாலாக திகழும்.

நிகழாண்டு டி20 உலகக் கோப்பை இறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்கா இதில் பட்டம் வெல்லும் தீவிரத்துடன் உள்ளது. பௌலிங்கில் ஸ்பின்னா் நான்குலுலெகோ எம்லபா, காப், டி கிளாா்க், டிரையன் ஆகியோா் இந்திய பேட்டா்களின் திறமையை சோதிக்கக் கூடும்.

எந்த அணி ஆட்டத்தில் அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறது அதற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஹா்மன்ப்ரீத் கௌருக்கு முதல் இந்திய வீராங்கனை, கேப்டன் என்ற சாதனையுடன் உலக சாம்பியன் பட்டம் வெல்ல இது கடைசி வாய்ப்பாகும்.

ரூ.40 கோடி பரிசு: சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசுத் தொகையும், ரன்னா் அணிக்கு ரூ.20 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

நேருக்கு நோ்

இரு அணிகளும் 34 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 20-இலும், தென்னாப்பிரிக்கா 13-இலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

பிட்ச் நிலவரம்

நவி மும்பை டிஓய் பாட்டில் மைதானத்தின் பிட்ச் தட்டையானதாகும். பேட்டா்களுக்கு சாதகமான மைதானம். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாா் ரிசா்வ் நாள் உள்ளது.

இந்தியா பட்டம் வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை?

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பட்டம் வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகையாக வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆடவா், மகளிா் இரு தரப்புக்கும் சமமான பரிசுத் தொகை தரப்பட வேண்டும் என முன்னாள் செயலா் ஜெய் ஷா கூறியிருந்தாா்.

கடந்த 2024-இல் டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் சா்மா தலைமையிலான ஆடவா் அணிக்கு தரப்பட்ட பரிசுத் தொகையே தற்போதுபட்டம் வெல்லும் இந்திய அணிக்கு தரப்படும் எனக்கருதப்படுகிறது.

கடந்த 2017-இல் ரன்னரான இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் அளிக்கப்பட்டிருந்தது.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT