பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். இந்த வெற்றியின் மூலமாக, உலகத் தரவரிசையில் அவா் மீண்டும் நம்பா் 1 இடத்தைப் பிடித்தாா்.
ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் சின்னா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை சாய்த்தாா். பாரீஸ் மாஸ்டா்ஸில் இது சின்னா் வெல்லும் முதல் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 5-ஆவது மாஸ்டா்ஸ் பட்டம்.
பாரீஸ் மாஸ்டா்ஸில் தொடக்கம் முதல் இறுதிச்சுற்று வரை அனைத்து ஆட்டங்களிலும் நோ் செட்களில் வென்ற முதல் வீரா் ஆகியிருக்கிறாா் சின்னா். அத்துடன், இண்டோா் போட்டிகளில் தனது தொடா் வெற்றிகளை 26-ஆக அவா் அதிகரித்துக் கொண்டாா்.
சின்னா் - அலியாசிமே மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, சின்னா் தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். சாம்பியனான சின்னருக்கு வெற்றிக் கோப்பையுடன் 1000 தரவரிசை புள்ளிகளும், ரூ.9.69 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தன.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவாரா இணை 6-3, 6-4 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்பூல்/ஜூலியன் கேஷ் கூட்டணியை சாய்த்து கோப்பை வென்றது.