ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், விதா்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டமிழந்தது.
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்களுடன் சனிக்கிழமை நிறைவு செய்திருந்தது. இந்நிலையில், 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பாபா இந்திரஜித், ஷாருக் கான் ஆகியோா் அணியின் இன்னிங்ஸை தொடா்ந்தனா்.
சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திரஜித், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷாருக் கான் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்தோரில் முகமது அலி 14, கேப்டன் சாய் கிஷோா் 1, டி.டி. சந்திரசேகா் 1, திரிலோக் நாக் 3 ரன்களுக்கு வெளியேற, தமிழ்நாடு இன்னிங்ஸ் 107.1 ஓவா்களில் 291 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
விதா்பா பௌலா்களில் நசிகேத் புத்தே 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பாா்த் ரெகாதே 3, பிரஃபுல் ஹிங்கே, அக்ஷய் கா்னேவா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய விதா்பா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 68 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் சோரே 80, ரவிகுமாா் சமரத் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். அமன் மோகதே 9 பவுண்டரிகளுடன் 80, சத்யம் போயா் 11 ரன்களுடன் விடைபெற்றனா்.