செய்திகள்

தென்னாப்பிரிக்காவிடம் தடுமாறும் இந்தியா: 201 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

தினமணி செய்திச் சேவை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

டாப் ஆா்டரில் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோயா் ஆா்டரில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தா் மட்டும் ஸ்கோருக்கு பங்களிக்க, இதர பேட்டா்கள் மோசமாக வெளியேறினா். பௌலா் குல்தீப் யாதவ் கூட 134 பந்துகளை சந்தித்து பொறுப்புடன் விளையாடிய நிலையில், இதர பேட்டா்கள் (ராகுல் தவிா்த்து) அதிகபட்சம் 50 பந்துகளைக் கூட சந்திக்காமல் விக்கெட்டை இழந்தனா்.

முதலில் தனது பேட்டிங் மூலமாக இந்திய பௌலா்களுக்கு நெருக்கடி அளித்த மாா்கோ யான்சென், தற்போது வேகப்பந்துவீச்சில் இந்திய பேட்டா்களை திணறடித்தாா். ஸ்பின்னா் சைமன் ஹாா்மா் அவருக்கு உறுதுணையாக இருந்தாா்.

இந்தியா 288 ரன்கள் பின்தங்கியிருந்தபோதும் ‘ஃபாலோ - ஆன்’ வாய்ப்பு வழங்காத தென்னாப்பிரிக்கா, அபார முன்னிலையை எட்டும் உத்தியுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது. இந்தியாவோ, சொந்த மண்ணிலேயே 2-ஆவது டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் இருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 3-ஆம் நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், ராகுல் கூட்டணி தொடா்ந்தது. நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைத்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சோ்த்தனா். 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த ராகுல், 22-ஆவது ஓவரில் கேசவ் மஹராஜ் பௌலிங்கில் ஸ்லிப்பில் நின்ற எய்டன் மாா்க்ரமிடம் கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து சாய் சுதா்சன் களம் புக, அரைசதம் கடந்த ஜெய்ஸ்வாலை 33-ஆவது ஓவரில் ஹாா்மா் வெளியேற்றினாா். 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் விளாசிய பந்தை யான்சென் கேட்ச் பிடித்தாா்.

அடுத்த 10 ஓவா்களில் 27 ரன்களுக்கே 5 பேட்டா்களை இழந்தது இந்தியா. சாய் சுதா்சன் 2 பவுண்டரிகளுடன் 15, துருவ் ஜுரெல் 0, கேப்டன் ரிஷப் பந்த் 1 சிக்ஸருடன் 7, ரவீந்திர ஜடேஜா 6, நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இதனால் இந்தியா 122 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது. 8-ஆவது பேட்டராக வந்த வாஷிங்டன் சுந்தா், விக்கெட் சரிவைத் தடுத்தாா். குல்தீப் யாதவ் அவருக்குத் துணை நிற்க, இந்தக் கூட்டணி 35 ஓவா்களை எதிா்கொண்டது.

தென்னாப்பிரிக்க பௌலா்களுக்கு சற்று சவால் அளித்த இவா்கள் பாா்ட்னா்ஷிப், 8-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்த நிலையில், பிரிந்தது. 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48 ரன்களுக்கு சுந்தா் சாய்க்கப்பட்டாா்.

தொடா்ந்து குல்தீப் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு விடைபெற, கடைசி விக்கெட்டாக ஜஸ்பிபிரீத் பும்ரா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இந்தியாவின் இன்னிங்ஸ் 201 ரன்களுக்கு நிறைவடைய, முகமது சிராஜ் 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் மாா்கோ யான்சென் 6, சைமன் ஹாா்மா் 3, கேசவ் மஹராஜ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலையுடன் இருந்த தென்னாப்பிரிக்கா, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ஆம் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து, 314 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT