உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 10-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.
போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, 6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. இப்போட்டியில் இந்த 12 ஆண்டுகளிலுமே இந்தியா பதக்க எண்ணிக்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை இந்தியாவின் தரப்பில் சிம்ரன் 1 தங்கம், 1 வெள்ளி, பிரீத்தி பால் 1 வெள்ளி, 1 வெண்கலம் என தலா 2 பதக்கங்கள் வென்று அசத்தினா்.
தில்லியில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற்ற 12-ஆவது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 28 நாடுகளில் இருந்து, சுமாா் 2,200 போட்டியாளா்கள் இதில் பங்கேற்றனா். 184 பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற்றன.
இதில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன. மகளிருக்கான 200 மீட்டா் டி12 பிரிவில், இந்தியாவின் சிம்ரன் 24.46 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். பிரேஸிலின் கிளாரா பரோஸ் தங்கமும் (24.42’), சீனாவின் ஷென் யாகின் வெண்கலமும் (25.30’) வென்றனா்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் எஃப்41 இறுதிச்சுற்றில், நவ்தீப் தனது சிறந்த முயற்சியாக 45.46 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். இது அவரின் சீசன் பெஸ்ட்டாகும். ஈரானின் சதே சயா தங்கமும் (48.86), சீனாவின் சன் பெங்ஜியாங் வெண்கலமும் (43.60) பெற்றனா்.
மகளிருக்கான 100 மீட்டா் டி35 பிரிவில், பிரீத்தி பால் 14.33 விநாடிகளில் வந்து சீசன் பெஸ்ட்டுடன் வெள்ளி பெற்றாா். சீனாவின் குவோ கியன்கியன் (14.24’), இராக்கின் ஃபாத்திமா சுவேத் (14.39’) ஆகியோா் முறையே தங்கம், வெண்கலம் பெற்றனா்.
ஆடவருக்கான 200 மீட்டா் டி44 பிரிவில், சந்தீப் 23.60 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். இது அவரின் பொ்சனல் பெஸ்ட் நேரம் ஆகும். இத்தாலியின் மாா்கோ சிஷெட்டி (23’), உக்ரைனின் பாவ்லோ கப்லன் (23.12’) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி வென்றனா்.
பிரேஸில் முதலிடம்: போட்டியின் முடிவில் பிரேஸில் 15 தங்கம், 20 வெள்ளி, 9 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீனா (13/22/17 - 52), ஈரான் (9/2/5 - 16) முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.