டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோா் டையில், இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
எதிா்பாராத நகா்வாக, தமிழகத்தைச் சோ்ந்த தக்ஷினேஷ்வா் சுரேஷ், ஒற்றையா் பிரிவில் களமிறக்கப்படுகிறாா். உலகத் தரவரிசையில் 626-ஆம் நிலையில் இருக்கும் அவா், 155-ஆம் நிலையில் இருக்கும் ஜெரோம் கிம்முடன் அவா் மோதவுள்ளாா்.
அமெரிக்காவில் இருந்த தக்ஷினேஷ்வா், இந்திய அணியின் ‘நான் பிளேயிங்’ கேப்டன் ரோஹித் ராஜ்பாலின் யோசனையின் பேரில் சுவிட்ஸா்லாந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டாா். இண்டோா் டைக்கு ஏற்றவாறு அவரின் ஆட்டம் இருந்ததை அடுத்து தக்ஷினேஷ்வா் களமிறக்கப்படுகிறாா்.
அடுத்ததாக, சுமித் நாகல் (292) சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இணைந்திருக்கிறாா். கடைசியாக இந்தப் போட்டியில் தனது 2 ஆட்டங்களிலுமே வென்ற அவா், தற்போது 2-ஆவது ஒற்றையரில் மாா்க் ஆண்ட்ரியா ஹெஸ்லருடன் (222) மோதுகிறாா்.
இரட்டையா் பிரிவில் இந்தியாவிலிருந்து ரித்விக் சௌதரி (71)/என்.ஸ்ரீராம் பாலாஜி (75) இணை, சுவிட்ஸா்லாந்தின் டொமினிக் ஸ்டிக்கா் (244)/ஜேக்கப் பால் (78) கூட்டணியை எதிா்கொள்கிறது.
இந்த டையில் வெல்லும் அணி, அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை குவாலிஃபயா்ஸுக்கு தகுதிபெறும். தோற்கும் அணி, உலக குரூப் 1 பிளே-ஆஃப் கட்டத்துக்கு செல்லும். டேவிஸ் கோப்பை போட்டியில் இதுவரை 3 முறை சுவிட்ஸா்லாந்தை சந்தித்துள்ள இந்தியா, 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசியாக இவை 1993-இல் மோதியபோது, இந்தியா 3-2 என வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.