தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.
முன்னதாக, அவர் உள்ளிட்ட 3 இந்திய வீராங்கனைகள் ரீகர்வ் மகளிர் தனிநபர் பிரிவில் நேரடியாக 3-ஆவது சுற்றில் களம் கண்டனர். இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத் போன்ற பிரதான வீராங்கனைகள் அந்த சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.
அதில் வென்று 4-ஆவது சுற்றுக்கு வந்த கதா காடகே, உலகின் நம்பர் 1 வீராங்கனையான உள்நாட்டின் லிம் சிஹியோனை எதிர்கொண்டார். அவரின் சவாலுக்கு தகுந்த பதிலளிக்க முடியாத கதா காடகே 0-6 என்ற கணக்கில் அவரிடம் தோல்வி கண்டார்.
இதையடுத்து, ரீகர்வ் பிரிவில் இந்தியர்கள் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர். 2019-க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே தொடர்கிறது.
இப்போட்டி வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்தியா 2 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. காம்பவுண்ட் பிரிவில் ரிஷப் யாதவ், பிரதமேஷ் ஃபுகே, அமன் சைனி அடங்கிய ஆடவர் அணி வரலாற்றுத் தங்கமும், ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா இணை கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளியும் வென்றது நினைவுகூரத்தக்கது.
போட்டியை நடத்திய தென் கொரியா 2 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடம் பிடிக்க, மெக்ஸிகோ 2 தங்கம், 1 வெண்கலத்துடன் 2-ஆம் இடமும், ஸ்பெயின் 2 தங்கத்துடன் 3-ஆம் இடமும் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.