டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், உலகின் 626-ஆம் நிலையில் இருப்பவருமான தக்ஷிணேஷ்வர் சுரேஷ், 7-6 (7/4), 6-3 என்ற நேர் செட்களில், தரவரிசையில் தன்னை விட அபார முன்னிலையில் (155) இருக்கும் ஜெரோம் கிம்மை வீழ்த்தி அசத்தினார்.
தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் ஆர்யன் ஷாவுக்கு (401) பதிலாக, ரிசர்வ் நிலையிலிருந்த தக்ஷிணேஷ்வரை களமிறக்கும் கேப்டன் ரோஹித் ராஜ்பாலின் நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருக்கிறார்.
அடுத்ததாக 2-ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் பிரதான வீரரான சுமித் நாகல் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் மார்க் ஆண்ட்ரியா ஹியுஸ்லரை வீழ்த்தினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே அவர் வென்றிருக்கிறார்.
இதையடுத்து, சுவிட்ஸர்லாந்துக்கு எதிரான டையில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்ததாக சனிக்கிழமை, இரட்டையர் மற்றும் ரிவர்ஸ் ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா ஒரு வெற்றியைப் பதிவு செய்தாலே, ஐரோப்பிய மண்ணில் டேவிஸ் கோப்பை வெற்றியை பதிவு செய்துவிடும். ஐரோப்பிய அணிக்கு எதிராக இந்தியா இத்தகைய வெற்றியை பதிவு செய்வது அரிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.