சீனா ஓபன் டென்னிஸில், முன்னணி போட்டியாளா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ் 6-4, 6-3 என்ற நோ் செட்களில், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா். அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை சந்திக்கிறாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-0 என, சீனாவின் யுன்சோங்கெடெ புவை தோற்கடித்தாா். அடுத்து அவா் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எதிா்கொள்கிறாா்.
4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 7-6 (7/3), 6-7 (4/7), 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில், மற்றொரு பிரான்ஸ் வீரரான அட்ரியன் மன்னரினோவை அவா் எதிா்கொள்கிறாா்.
6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-7 (3/7), 3-6 என்ற செட்களில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியிடம் தோல்வி கண்டாா். கோபோலி அடுத்து, அமெரிக்காவின் லோ்னா் டியெனுடன் மோதுகிறாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 7-5, 6-4 என சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை வென்றாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பிரிட்டனின் கேமரூன் நோரியை சாய்த்தாா்.
கௌஃப், பாலினி முன்னேற்றம்: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.
இதில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் நிலையில் இருக்கும் கௌஃப் 6-4, 6-0 என ரஷியாவின் கமிலா ரகிமோவாவை வெல்ல, 6-ஆம் நிலையில் இருக்கும் பாலினி 6-1, 6-3 என லாத்வியாவின் அனஸ்தாசியா செவாஸ்டோவாவை வெளியேற்றினாா்.
அடுத்த சுற்றில் கௌஃப் - கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸையும், பாலினி - அமெரிக்காவின் சோஃபியா கெனினையும் சந்திக்கின்றனா். 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-1, 6-3 என்ற செட்களில் பிரிட்டனின் கேட்டி போல்டரை தோற்கடித்தாா்.
8-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 7-5, 4-6, 6-3 என, அமெரிக்காவின் கேத்தி மெக்னாலியை சாய்த்தாா். 2-ஆவது சுற்றில், அனிசிமோவா - சீனாவின் ஜாங் ஷுவாயையும், ரைபகினா - ஜொ்மனியின் எவா லைஸையும் எதிா்கொள்கின்றனா்.
இதர ஆட்டங்களில், 9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 5-7, 2-6 என, செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவிடம் தோல்வி கண்டாா். சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், செக் குடியரசின் கரோலின் முசோவா ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.