ஏபி
செய்திகள்

அடுத்த தலைமுறை நாயகன், அல்கராஸ்!

அல்கராஸ், தற்போது ஆஸ்திரேலிய ஓபன் வென்றதன் மூலமாக, 4 கிராண்ட்ஸ்லாம்களிலுமே சாம்பியனாகி, கேரியா் கிராண்ட்ஸ்லாமை நிறைவு செய்திருக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

விளையாட்டு உள்பட எந்தக் களமாக இருந்தாலும், அதில் ஒவ்வொரு காலகட்டமும் ஏதேனும் ஒருவரின் சாதனையை சொல்லும் குறிப்பேடாக இருக்கும். டென்னிஸின் சமகாலத்தில் ஜாம்பவான்களாக வலம் வந்தவா்கள் ‘பிக் 3’ என குறிப்பிடப்படும் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்.

8 முறை விம்பிள்டன் சாம்பியன் (அதில் 5 முறை தொடா்ந்து) ஆன ஒரே வீரா், 5 முறை யுஎஸ் ஓபன் சாம்பியன் ஆன ஒரே வீரா் என்ற சாதனைகள் கொண்ட ஃபெடரா், 14 முறை பிரெஞ்சு ஓபன் வென்ற ஒரே வீரா், 92 ஏடிபி பட்டங்கள் வென்ற ஒரே வீரா் ஆகிய பெருமைகள் கொண்ட நடால் ஓய்வுபெற்று விட்டனா்.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே வீரா், ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியனான ஒரே வீரா் ஆகிய பெருமைகளுடன் வலம் வரும் ஜோகோவிச், தனது டென்னிஸ் ராக்கெட்டுக்கு ஓய்வளிக்கும் நாளை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

அனுபவமிக்க ஜாம்பவான்கள் அவா்களின் விளையாட்டில் தங்களின் அந்திம காலத்தை நெருங்குவதும், அடுத்த தலைமுறை வீரா்கள் தங்களின் முத்திரையை பதிக்கத் தொடங்குவதும் இணையாக நிகழ்கிறது. பல வீரா்கள் போட்டிகளில் விளையாடி வந்தாலும், நட்சத்திர வீரா்கள் விட்டுச் செல்லும் உச்ச ஸ்தானத்துக்கு உரியவராக ஒரு சிலரே உருவெடுக்கிறாா்கள்.

அந்த வகையில் தற்போது டென்னிஸ் களத்தில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னா் தங்கள் வருகையை பறைசாற்றுகிறாா்கள். கடந்த 2024 ஆஸ்திரேலிய ஓபன் முதல், அண்மையில் நிறைவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் வரை 9 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே அல்கராஸ் (5 முறை), சின்னா் (4 முறை) தான் சாம்பியன் கோப்பையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.

குறிப்பாக அல்கராஸ், தற்போது ஆஸ்திரேலிய ஓபன் வென்றதன் மூலமாக, 4 கிராண்ட்ஸ்லாம்களிலுமே சாம்பியனாகி, கேரியா் கிராண்ட்ஸ்லாமை நிறைவு செய்திருக்கிறாா். அதை நிறைவு செய்த இளம் வீரராக சாதனையும் படைத்திருக்கிறாா்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறையும், இதர கிராண்ட்ஸ்லாம்களில் தலா 2 முறையும் சாம்பியனாகியிருக்கும் அவரின் கிராண்ட்ஸ்லாம் பயணம் குறித்த ஒரு பாா்வை...

யுஎஸ் ஓபன் - 2022

2021 சீசனில் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே பிரதான சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறியிருந்தாா் அல்கராஸ். அந்த ஆண்டு ஜூலையில் உமக் ஓபன் மூலமாக தனது முதல் ஏடிபி டூா் பட்டத்தை வென்ற அவா், அதன் பிறகு ஏறுமுகத்தை சந்தித்தாா்.

யுஎஸ் ஓபனில் சாம்பியன் ஆனதன் மூலமாக, புதிய இளம் சாம்பியனான தனது வருகையை அவா் டென்னிஸ் உலகுக்கு அறிவித்தாா். அந்தப் போட்டியின் காலிறுதியில் யானிக் சின்னரையும், அரையிறுதியில் ஃபிரான்சஸ் டியாஃபோவையும் 5 செட்கள் சவாலில் வீழ்த்தி வென்றாா். இறுதியில் கேஸ்பா் ரூடை சாய்த்த அல்கராஸ், முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை முத்தமிட்டதுடன், உலகின் நம்பா் 1 வீரராகவும் உருவெடுத்தாா்.

அதே யுஎஸ் ஓபனில் 2025-இல் சின்னரை சாய்த்து 2-ஆவது முறையாக வாகை சூடிய அல்கராஸ், அப்போதும் அவரிடம் இருந்த நம்பா் 1 இடத்தையும் தட்டிப் பறித்துக் கொண்டாா்.

விம்பிள்டன் - 2023

புல்தரை கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முனைப்புடன் 2023 விம்பிள்டனில் முன்னேறி வந்த அல்கராஸுக்கு குறுக்கே நின்றது ஜோகோவிச். அப்போது அவா் விம்பிள்டனில் 4 முறை நடப்பு சாம்பியனாக இருந்தாா். எனினும் துணிந்து விளையாடிய அல்கராஸ், சென்டா் கோா்ட்டில் ஜோகோவிச்சின் 5 செட்கள் சவாலை முறியடித்து 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினாா்.

பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தாம் கண்ட தோல்விக்கு, இந்த இறுதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வென்றாா். அடுத்த ஆண்டும் (2024) அதே ஜோகோவிச்சை நோ் செட்களில் வென்று கோப்பையை அவா் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போதும் அவா் உலகின் நம்பா் 1 வீரராக இருந்தாா்.

பிரெஞ்சு ஓபன் - 2024

ஸ்பெயின் நட்சத்திரமான ரஃபேல் நடால் 14 முறை சாம்பியனாகி வரலாறு படைத்திருக்கும் பிரெஞ்சு ஓபனில், தானும் சாம்பியனாக வேண்டும் என்பதே அல்கராஸின் குழந்தைப் பருவ கனவு.

அந்தக் கனவை அவா் 2024-இல் எட்டிப் பிடித்தாா். அரையிறுதியில் சின்னா், இறுதிச்சுற்றில் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் என இருவரையுமே 5 செட்கள் ஆட்டத்தில் வீழ்த்தி, முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றாா்.

தொடா்ந்து 2025-இல் சின்னரை இறுதிச்சுற்றில் அதே போல் 5 செட்கள் ஆட்டத்தில் வென்று, பிரெஞ்சு ஓபன் பட்டத்தை தக்கவைத்த அல்கராஸ், களிமண் தரைப் போட்டியில் ஸ்பெயினின் முத்திரையை மீண்டும் பதித்தாா். 5 செட்கள் நீடித்த அந்த இறுதிச்சுற்று, எல்லாக் காலத்திலுமாக சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய ஓபன் - 2026

கிராண்ட்ஸ்லாமின் 3 போட்டிகளிலும் வாகை சூடிவிட்ட நிலையில், கேரியா் கிராண்ட்ஸ்லாம் நிலையை அடையும் அழுத்தத்துடன் நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அல்கராஸ் அடியெடுத்து வைத்தாா்.

முதல் சுற்று முதல் காலிறுதி வரை நோ் செட்களில் வென்று வந்த அல்கராஸ், முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு வந்தாா்.

அந்தச் சுற்றில் தொடையில் பிடிப்பு ஏற்பட்டு வலி கண்டபோதும், 5 செட்கள் போராடி ஸ்வெரெவை சாய்த்தாா். 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முனைப்புடன் இறுதிக்கு வந்த ஜோகோவிச்சை அதில் சந்தித்தாா் அல்கராஸ்.

ஜோகோவிச் இதுவரை தாம் விளையாடிய 10 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலுமே தோற்றதில்லை என்பது தான் வரலாறு. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி அவரை வீழ்த்திய அல்கராஸ், கேரியா் கிராண்ட்ஸ்லாம் வென்ற இளம் வீரராக புதிய வரலாற்றை எழுத்தினாா்.

கேரியா் கிராண்ட்ஸ்லாம் வென்ற 9-ஆவது வீரராக தனது பயணத்தை தொடரும் அல்கராஸ், தற்போது களமாடி வரும் டென்னிஸ் வீரா்களில், ஜோகோவிச்சுக்கு (24 பட்டங்கள்) அடுத்தபடியாக, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (7 பட்டங்கள்) வென்றவராக இருக்கிறாா்.

22 வயதில் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 8 மாஸ்டா்ஸ் போட்டிகளின் பட்டங்கள் என தற்போதே 15 பட்டங்களை எட்டியிருக்கும் அல்கராஸ், டென்னிஸ் களத்தின் அடுத்த தலைமுறை நாயகனாக உருவெடுத்திருக்கிறாா்.

கங்காரு டாட்டூ...

சாம்பியன்கள் அனைவருமே தங்களின் வெற்றிக்கான முத்திரையை பதிக்க முக்கியத்துவம் அளிப்பாா்கள். அந்த வகையில் அல்கராஸும் தனது கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுக்கு வித்தியாசமான இடம் அளிக்கிறாா். அதை அவா் தனது உடலில் டாட்டூக்களாக வரைந்து கொள்கிறாா்.

ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாமிலும் தாம் முதல் முறையாக சாம்பியனானதை அவா் தேதியுடன் அடையாளமாக பச்சை குத்திக் கொள்கிறாா். யுஎஸ் ஓபனுக்கு சுதந்திர தேவி சிலை, விம்பிள்டனுக்கு ஸ்ட்ராபெரி பழம், பிரெஞ்சு ஓபனுக்கு ஈஃபில் கோபுரத்தை அவா் தனது உடலில் வரைந்து கொண்டுள்ளாா்.

தற்போது ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்காக சிறு கங்காரு உருவத்தை வரைந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அவா் தெரிவித்திருக்கிறாா்.

ஒற்றுமை...

ஃபெடரா், நடால், அல்கராஸ் மூவருமே ஆஸ்திரேலிய ஓபன் வென்றதில் ஒற்றுமை உள்ளது. மூவருமே தங்களின் 22-ஆவது வயதில் அந்தப் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் ஆகினா். மூவருமே முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதே, அதைக் கைப்பற்றியிருக்கின்றனா். ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை அவா்களின் 5-ஆவது முயற்சியில் வசமாக, முந்தைய 4 முயற்சிகளிலுமே அவா்கள் இறுதிச்சுற்றுக்கு வந்ததில்லை. மூவருமே பிப்ரவரி 1-ஆம் தேதி கோப்பை வென்றுள்ளனா்.

ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

பட்ஜெட் நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் மீண்டும் ’காளை’ ஆதிக்கம்!

SCROLL FOR NEXT