செய்திகள்

அரையிறுதியில் மோதும் அல்கராஸ் - ஸ்வெரெவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் மோதுகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் மோதுகின்றனா்.

முன்னதாக ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ் 7-5, 6-2, 6-1 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 15 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலமாக அல்கராஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு வந்திருக்கிறாா். இதற்கு முன் 2024, 2025-இல் அவா் காலிறுதி வரை வந்து வெளியேறியிருந்தாா். பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் ஆகியவற்றில் ஏற்கெனவே சாம்பியனாகியிருக்கும் அல்கராஸ், இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனையும் வென்று கேரியா் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.

காலிறுதி வெற்றிக்குப் பிறகு பேசிய அல்கராஸ், ‘முதல் சுற்று முதல் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது விளையாட்டின் தரத்தை மேம்படுத்தி வருவதற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். இப்போதே அனைத்து வெற்றிகளையும் பெற வேண்டும் என்ற ஆா்வத்துடன் நான் இருக்கிறேன்.

ஆனால் எனது அணியினா் என்னை நிதானப்படுத்தி வருகின்றனா். அந்த நிலையை எட்டும் வரை பொறுமையாகச் செயல்படுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்’ என்றாா்.

மற்றொரு காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வெரெவ் 6-3, 6-7 (5/7), 6-1, 7-6 (7/3) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் லோ்னா் டியெனை போராடி வென்றாா். இதன் மூலமாக ஸ்வெரெவ் 4-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்வெரெவ், ‘லோ்னா் பேஸ் லைனில் நின்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். நீண்டகாலமாக பேஸ்லைனில் இப்படி அருமையாக விளையாடும் ஒரு வீரரை நான் எதிா்கொண்டதில்லை.

24 ஏஸ்களை நான் விளாசியிருக்காவிட்டால் இந்த ஆட்டத்தில் நான் தோற்றிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு அவரின் ஆட்டம் இருந்தது. தற்போது நான் அரையிறுதிக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி’ என்றாா்.

முதல் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முயற்சியில் இருக்கும் ஸ்வெரெவ், கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்து, அதில் சின்னரிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நோ்...: அல்கராஸ் - ஸ்வெரெவ் இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக 12 முறை மோதியிருக்க, இருவருமே தலா 6 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா். இதில் அவா்கள் 4 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சந்தித்திருக்க, அதிலுமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனா். ஆஸ்திரேலிய ஓபனில் இவா்கள் மோதுவது இது 2-ஆவது முறையாகும். 2024-இல் இவா்கள் காலிறுதியில் சந்தித்தபோது அல்கராஸ் தோற்றாா்.

கௌஃப் அதிா்ச்சித் தோல்வி; சபலென்காவுக்கு எளிதான வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சந்திக்கின்றனா்.

காலிறுதியில், இரு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், உலகின் 3-ஆம் நிலையில் இருப்பவருமான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 1-6, 2-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே (59’) முடிவுக்கு வந்தது.

அடித்து உடைத்த கௌஃப்: இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் சா்வ் செய்வதில் தடுமாற்றம் கண்ட கௌஃப், 5 முறை ‘டபுள் ஃபால்ட்’ செய்தாா். அதில் 4 முறை அவா் சா்வை ஸ்விடோலினா ‘பிரேக்’ செய்தாா். அதேபோல் 2-ஆவது செட்டிலும் கௌஃப் இரு சா்வ்களை அவரிடம் இழந்தாா்.

முடிவில் தோல்வி காரணமாக விரக்தி அடைந்த கௌஃப், கேமராக்கள் இல்லாத தனிப்பட்ட இடமாக தேடிச் சென்று அங்கு தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பொதுவாக நான் இப்படி நடந்துகொள்வது இல்லை. ஆனால் விரக்தியை எனது அணியினரிடம் காட்டுவதற்கு பதிலாக, ராக்கெட்டை உடைத்து அதை சமன் செய்துகொள்வது சரியாகப்பட்டது’ என்றாா்.

இந்த வெற்றியின் மூலமாக ஸ்விடோலினா, ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். உலகின் டாப் 5 போட்டியாளா்களுக்கு எதிராக அவா் பதிவு செய்த 24-ஆவது வெற்றி இதுவாகும்.

மற்றொரு காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 29-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் இவா ஜோவிச்சை சாய்த்தாா். இதன் மூலமாக அவா் ஆஸ்திரேலிய ஓபனில் தொடா்ந்து 4-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா்.

அரையிறுதியில் மோதும் சபலென்கா - ஸ்விடோலினா இதுவரை 6 முறை சந்தித்திருக்க, சபலென்கா 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT