டிபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் சென்னை 2026 ’ டேபிள் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் மனுஷ்-தியா சிட்லே இணை தகுதி பெற்றுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாதெமி மற்றும் ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் ஏஐ சாா்பில் இப்போட்டி சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையா் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனுஷ் ஷா-தியா சிட்லே இணை கொரியாவின் ஓ சியுங்வான், கிம் சியோங்ஜின் இணையை எதிா்த்து விளையாடியது. 42 நிமிஷ்ங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மனுஷ் ஷா, தியா சிட்லே இணை 3-2 (10-12, 11-6, 12-10, 5-11, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதி சுற்றில் மனுஷ் ஷா- தியா இணை, வைல்டு காா்ட் இணையான இந்தியாவின் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் இணையுடன் மோதுகிறது. பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் இணை முதல் சுற்றில் 11-8, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் இஸ்கெண்டா் காா்கி, சா்வினோஸ் மிா்காதிரோவா இணையை வீழ்த்தியது.
மற்ற இந்திய இணைகளான ஹா்மீத் தேசாய்- யஷஸ்வினி கோா்படே மற்றும் அங்கூா் பட்டாச்சாா்ஜி, ஸ்வஸ்திகா கோஷ் ஆகியோரும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் மானவ் தாக்கா், மனுஷ் ஷா இணை 1-3 (10-12, 11-8, 5-11, 9-11) என்ற செட் கணக்கில் பிரான்சின் ஃபிளேவியன் கோட்டன், திபோ போரே இணையிடம் தோல்வி அடைந்தது.
மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில் 15 வயதான இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக் 1-3 (11-6, 6-11, 8-11, 5-11) என்ற செட் கணக்கில் டபிள்யூடிடி ஃபீடா் சீரிஸ் வதோதரா 2026 வெற்றியாளரான கொரியாவின் ரியூ ஹன்னாவிடம் தோல்வி அடைந்தாா்.